அமைதி காக்கும் நடவடிக்கை: துருப்புக்களை அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படாது
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு துருப்புக்களை தயார்படுத்துவதற்கு முன்னர் லிபரல் அரசாங்கம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தாது என்று சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு துருப்புக்களை தயார்படுத்துவது குறித்த எதிர்கால நோக்கங்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் ஐஸ்ரின் ரூடோ அவருடைய அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பார். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட மாட்டார். இது குறித்த முடிவு அமைச்சரவை குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதனை உதிப்படுத்தும் வகையில் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் கருத்து வெளியிட்டுள்ளார். ‘கனேடிய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மிகவிரைவில் செயற்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லண்டனில் ஐக்கிய நாடுகள் அமைதிகாத்தல் பாதுகாப்பு அமைச்சகங்களுடன் தொடர்பு கொண்டதாக தெரிவித்த சஜ்ஜன், அடுத்த வருடம் கனடாவில் உச்சிமாநாடு நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபிரிக்காவுடனான ஐ.நாவின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் 600 துருப்புக்கள் நிலைநிறுத்தப்படும் என்று ஏற்கனவே கனடா உறுதியளித்திருந்தது. அத்துடன் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக 450 மில்லியன் டொலர்களை வழங்குவதாகவும் கனேடிய அரசு உறுதி அளித்தது.
மாலி, தெற்கு சூடான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ ஜனநாயக குடியரசு ஆகியன கனேடிய துருப்புக்களுக்கு சாத்தியமான இடங்களாக உள்ளன. இவற்றுள் மாலி மிகவும் ஆபத்தான இடமாக கருதப்படுகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 100 ற்கும் மேற்பட்ட அமைதிகாக்கும் படையினர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.