பெயரிலேயே இனிப்பு இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துகளை கருத்தில் கொள்ளும்போது, அதனை நாம் கொண்டாட வேண்டும்.
‘சர்க்கரை’வள்ளிக்கிழங்கு எனப் பெயரிலேயே இனிப்பு இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதனைச் சாப்பிடக்கூடாது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. அது தவறு. உண்மையில் இது மாற்றான குணங்களைக் கொண்டது. இதற்கு சர்க்கரைநோயை வராமல் தடுக்கும் குணமும் உண்டு.
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் குறைந்தளவில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (Lower Glycemic Index) இருப்பதால், சர்க்கரைநோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். அதாவது, இதைச் சாப்பிடுகிறவர்களுக்கு உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கவும் உதவும் இந்தக் கிழங்கு. மேலும், ‘இதில் உள்ள நார்ச்சத்து உணவிலுள்ள குளூகோஸை ரத்தத்தில் சேர்க்கும் வேகத்தை வெகுவாகக் குறைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்’ என்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் GI ( Glycemic Index) அளவு குறைவாக உள்ளதாகக் கருதப்படுகிறது, ஆகவே சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஏற்ற வகையில் உங்கள் உணவைத் திட்டமிடுவதிலும் இது உதவும். இவற்றில் அதிக நார்ச்சத்தும் உள்ளது, ஆகவே நீரிழிவுநோய் உள்ளவர்களும் தனது தினசரி உணவுத் திட்டத்தில் இவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்த GI இருந்தால், அந்த உணவு உடனடியாக சிதைத்து செரிக்கப்படாது, அதாவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை உடனடியாக அதிகரிக்காது.
மொத்தத்தில், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துகளை கருத்தில் கொள்ளும்போது, அதனை நாம் கொண்டாட வேண்டும் எனலாம்! எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், இதனை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவுத்திட்டம் மிகவும் முக்கியம்.
அஜீரணம், மலச்சிக்கல், வயிறு உப்புசம் இருக்கும்போது சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.