நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ள 16 ஆவது பராலிம்பிக்கில் இலங்கை தனது கடைசி போட்டி நிகழ்வில் இன்றைய தினம் பங்கேற்கிறது. இலங்கை நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஆரம்பமாகும் ஆண்களுக்கான பிரிவு 63 இன் குண்டெறிதல் போட்டியில் இலங்கை வீரரான பாலித்த ஹல்கஹவெல களமிறங்கவுள்ளார்.
பதக்க நிலைக்கான போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டியில் 9 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் உஸ்பெகிஸ்தான், ஈரான், லக்ஸ்ம்பேர்க், பிரேஸில், தஜிகிஸ்தான், குவைத், தென் ஆபிரிக்கா, பிரித்தானியா ஆகிய நாட்டு வீரர்களுடன் இலங்கையின் பாலித்தவும் போட்டியிடுகிறார். இந்தப் போட்டியில் 13.42 மீற்றர் தூரத்துக்கு குண்டெறிந்தமையே இவரின் தனிப்பட்ட சாதனையாகவுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் தத்தம் போட்டி நிகழ்வுகளில் பங்கேற்ற இலங்கையர்கள் மூவரும் தோல்வியைத் தழுவியிருந்தனர். இதில் பெண்களுக்கான டி47 பிரிவின் நீளம் பாய்தலில் பங்கேற்ற குமுது திசாநாயக்க 4.92 மீற்றர் தூரம் பாய்ந்து தனது தனிப்பட்ட சாதனையை புதுப்பித்தார். 4.89 மீற்றர் தூரம் பாய்ந்தமையே இவரின் முந்தைய சாதனையாக இருந்தது.
ஆண்களுக்கான பிரிவு 47 இன் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற சமன் சுபசிங்க 51.08 செக்கன்களில் நிறைவு செய்து 4 ஆம் இடத்தை பிடித்து துரதிஷ்டவசமாக இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனது. இதில் 3 ஆம் இடத்தைப் பிடித்த டொமினிக்கன் குடியரசின் லூயிஸ் அண்ரேஸ் 50.94 செக்கன்களிலேயே நிறைவு செய்திருந்தார்.
மேலும், ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் விவேக் ஷிகாரவை எதிர்கொண்ட சம்பத் பண்டார 2க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார்.