இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி வந்த ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T. முருகானந்தம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘பிசாசு 2’.
இந்த திரைப்படத்தை ‘பிசாசு’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் மிஷ்கின் இயக்குகிறார். இதில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, இவருடன் நடிகை பூர்ணா, நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிவா. சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். மூன்று கட்டங்களாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
‘பிசாசு 2 ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மூலம் இரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கும் படக்குழுவினர், தற்போது தமிழகத்தில் படமாளிகைகள் திறக்கப்பட்டிருப்பதால் விரைவில் ‘பிசாசு 2’ படத்தை பட மாளிகைகளில் வெளியிடுவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும், படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதால் விரைவில் இசை வெளியீடு நடைபெறும் என்றும், அதற்கான திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.