கங்கையில் நீராடிய பலனைத் தரும் பல புண்ணியத் தீர்த்தங்கள் நம்முடைய தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. அந்த புண்ணிய நதி களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
காசி நகரம், சிவபெருமானே உருவாக்கியது என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த நகரைச் சுற்றிலும் ஓடும் கங்கை நதியானது, புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதில்நீராடினால் எப்பேர்ப்பட்ட பாவங்களும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆனால் அனைவராலும் கங்கை நதி பாயும் இடத்திற்குச் சென்று நீராட முடியுமா என்பது கேள்விக்குறிதான். அந்த வகையில் கங்கையில் நீராடிய பலனைத் தரும் பல புண்ணியத் தீர்த்தங்கள் நம்முடைய தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. அந்த புண்ணிய நதி களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
* மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தின் முன்பாக உள்ள காவிரியின் துலா கட்டத்தில், ஐப்பசி மாதம் முழுவதும் நீராடினால், கங்கையில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். கார்த்திகை முதல் நாள் நீராடினாலும் அந்தப் பலனைப் பெறலாம்.
* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர் என்ற ஊர். இங்கு ஸ்ரீதரஐயாவாள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்திற்குள் தீர்த்தக்கிணறு ஒன்று உள்ளது. இதில் கார்த்திகை மாத அமாவாசை நாளில் கங்கை நீர் பொங்கி வெளியேறும். அப்போது நீராடினால் புண்ணிய பலன் கிடைக்கும்.
* ஸ்ரீவாஞ்சியத்தில் குப்த கங்கை என்ற திருக் குளம் உள்ளது. இந்த திருக்குளத்திலும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.
* முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்று திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில். இங்குள்ள கடலில் தினமும் நண்பகல் வேளையில் கங்கை வந்து நீராடுவதாக ஐதீகம். இதனால் அந்த நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள், கடலுக்கு தீபாராதனை காட்டுவார்கள். அப்போது கடலில் நீராடினால், கங்கையில் நீராடிய பலனைக் கொடுக்கும்.
* சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், தஞ்சை பெரியகோவில் ஆகியவற்றில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தங்களில் நீராடினாலும், கங்கையில் நீராடிய புண்ணியம் வந்தடையும்.
* திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில், சனி பகவான் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு பெற்றது. இங்குள்ள கங்கா தீர்த்த குளத்தில் நீராடினால், கங்கையில் மூழ்கி எழுந்த பலன் உண்டாகும்.
* திருவாரூர் அருகே உள்ள குருவிராமேஸ்வரம் என்ற இடத்தில் முக்கூடல் தீர்த்தம் என்னும் திருவேணி சங்கமத்திற்கு சமமான தீர்த்தம் உள்ளது. இங்கு நீராடினாலும் கங்கையில் நீராடிய சிறப்பைப் பெற முடியும்.
* சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சவும்யநாராயணப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் மகா கிணறு ஒன்று இருக்கிறது. இங்கு ஐப்பசி அமாவாசை நாளில் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
* திருப்பூர் பஸ்நிலையம் அருகே உள்ளது விஸ்வேஸ்வரர் கோவில். இங்குள்ள தீர்த்தக் கிணறு, கங்கை தேவியே நீராடிய புனிதம் வாய்ந்தது என்று தல வரலாறு சொல்கிறது. எனவே அந்த தீர்த்தத்தில் நாமும் நீராடினால், கங்கையில் நீராடிய பலன் வந்தடையும்.
* திருக்கடையூர் வீரட்டானம் திருத்தலம், எமனிடம் இருந்து மார்க்கண்டேயனை சிவபெருமான் காப்பாற்றிய சிறப்புமிக்கது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் மயானம் என்ற இடம் உள்ளது. இங்கு காசி தீர்த்தம் ஒன்று இருக்கிறது. அது மார்க்கண்டேயருக்காக கங்கை நதி, தீர்த்தமாக உருவெடுத்த இடமாகும். எனவே இங்கு நீராடினாலும் கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.
* மதுரை அருகே உள்ள அழகர் கோவில் மிகவும் சிறப்புக்குரியது. அதற்கு மேல் உள்ள மலையில் முருகப்பெருமானின் ஆறு படை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. எங்கிருந்து வருகிறது என்றே கண்டறியப்படாத அந்த தீர்த்தத்தில் நீராடினாலும், கங்கையில் நீராடிய புண்ணியத்தை அடையலாம்.
* புனித நீராடலுக்கு பெயர் பெற்ற திருத்தலங்களில் ஒன்று, ராமேஸ்வரம். இங்கு கோடி தீர்த்தம் உள்ளது. ராமபிரான், இங்கே சிவலிங்க பிரதிஷ்டை செய்தபோது, அதனை நீராட்ட நன்னீர் தேவைப்பட்டது. ஆகையால், அவர் தன்னிடம் இருந்த அம்பை, பூமியில் அழுத்தினார். உடனே, அதில் இருந்து கங்கை பீறிட்டு வெளிவந்தது. அதுவே தற்போது கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கப்பெறும்.