16 ஆவது பரா ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியில் ஆரம்பம் முதல் தற்போது வரை சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சீனா இதுவரை 76 தங்கம், 45 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தமாக 164 பதக்கங்களைப் பெற்று முதலிடத்திலிருந்து வருகிறது.
ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 53 ஆவது இடத்திலுள்ள இலங்கை நாளைய தினம் நீளம் பாய்தல், 400 மீற்றர் ஓட்டப் போட்டி, வில்வித்தை ஆகிய மூன்று வகையான போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது.
நாளைய தினம் நடைபெறவுள்ள மெய்வல்லுநரில் குமுது திசாநாயக்க பெண்களுக்கான டி47 நீளம் பாய்தலில் பங்கேற்கவுள்ளார்.
4.89 மீற்றர் தூரம் பாய்ந்ததே இவரின் சிறந்த பெறுபேறாக உள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி நாளை காலை 6.05 மணிக்கு ஆரம்பமாகும்.
மேலும், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிகாண் சுற்றில் சமன் சுபசிங்க பங்கேற்கவுள்ளார்.
49.75 செக்கன்கள் என்ற நேரப் பெறுதியை தனது தனிப்பட்ட சாதனையாகக் கொண்டுள்ள இவர் நாளை காலை 7 மணிக்கு களமிறங்கவுள்ளார்.
ஆரம்பத்தினத்தன்று நடைபெற்ற ஆண்களுக்கான வில்வித்தைக்கான நிரல்படுத்தல் போட்டியில் 589 புள்ளிகளுடன் 23 ஆவது இடத்தைப் பிடித்த இலங்கையின் சம்பத் பண்டார 609 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தைப் பிடித்த இந்தியாவின் விவேக் ஷிகாராவை எதிர்கொள்ளவுள்ளார்.
இப்போட்டி நாளைய தினம் இலங்கை நேரப்படி காலை 8.45 மணிக்கு ஆரம்பமாகும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்.