அமெரிக்க ஓபன்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-வாவ்ரிங்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரான்சின் கேல் மான்பில்சுடன் மோதினார்.
இதில் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட ஜோகோவிச் ஆட்டத்தின் இடையே சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடினார்.
2 மணி 32 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-2, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் மான்பில்ஸ்சை தோற்கடித்து அமெரிக்க ஓபனில் 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
ஜோகோவிச்சுக்கு எதிராக மான்பில்ஸ் இதுவரை ஆடிய 13 ஆட்டங்களிலும் தோல்வியையே தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அரைஇறுதியில் 3-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் வாவ்ரிங்கா 4-6, 7-5, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை வெளியேற்றினார்.
2013, 2015-ம் ஆண்டுகளில் அரைஇறுதி தடையை கடக்க முடியாத வாவ்ரிங்கா இப்போது தான் அமெரிக்க ஓபனில் முதல்முறையாக இறுதிசுற்றை எட்டியிருக்கிறார்.
இந்திலையில் இன்று நடைபெறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் 2011, 2015-ம் ஆண்டு சாம்பியனான ஜோகோவிச், வாவ்ரிங்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
இருவரும் நேருக்கு நேர் சந்தித்த 23 ஆட்டங்களில் 19-ல் ஜோகோவிச்சும், 4-ல் வாவ்ரிங்காவும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.