ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி நாளை காலை கூடி, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது திங்கட்கிழமைக்குப் பிறகு நீக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போதுள்ள கோவிட் நிலைமையை மறுபரிசீலனை செய்ய கோவிட் -19 குழு இன்றிரவு கூடும்.
இந்த நிலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கோவிட் நிலவரம் மற்றும் முன்னேற்ற நிலைமைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பது தொடர்பில் நாளைய தினம் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பான முடிவானது ஜனாதிபதி பணிக்குழுவினால் எட்டப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை பணிக்குழு உறுப்பினர்கள் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.
மேலும், நாட்டில் கோவிட் தொற்று நிலையில் தீவிரமடைந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் கடந்த 30ஆம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை எதிர்வரும் 6ஆம் திகதிவரை நீடிக்க முடிவு எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.