அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தற்போது அமைச்சரவை அறிவித்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பலவந்தமாக அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கவும் முடியாது.
போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கும், 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு சம்பள ஆணைக்குழுவின் முன்வைக்கப்பட்ட யோசனையை கட்டம் கட்டமாக 2022 வரவு – செலவு திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உண்மையில் இந்த இரு யோசனைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மட்டத்தில் இல்லை. இதன் மூலம் 5,000 இலிருந்து 11,000 வரை சம்பள அதிகரிப்பே கிடைக்கப் பெறும். இதனை கட்டம் கட்டமாக வழங்குவதன் மூலம் ஆசிரியர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? எனவே எமது போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்.
போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்து சகல தொழிற்சங்கத்தினரையும் ஒன்றிணைத்து இது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவோம். இதனை இவ்வாறே செல்ல அனுமதிக்க முடியாது. அமைச்சரவை தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதனை பலவந்தமாக ஏற்றுக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கவும் முடியாது என்றார்.