தங்கமகன் மாரியப்பன்: சாதனை தமிழனின் வெற்றிக்கு பின்னால் ஒரு நெகிழ்ச்சி கதை
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியை அடுத்த பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க பணம் இல்லாமல் தவித்த போது, அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரது கிராம மக்கள் தான்.
பெரிய வடகம்பட்டி கிராம மக்களின் உதவி மற்றும் வழிகாட்டுதல் காரணமாகவே மாரியப்பனால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்ததாக கூறும் அவரது தாயார், ரியோ பாரா ஒலிம்பிக் வெற்றியை ஒட்டுமொத்த கிராமமும், தீபாவளிப் பண்டிகை போல் கொண்டாடி வருவது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ரியோ பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கம் வென்றதை அடுத்து, அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியில் கிராமத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
வறுமையால் வாடிய மாரியப்பன், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு நிதிப்பற்றாக்குறையால் தவித்த போது அவருக்கு கைகொடுத்து உதவியது அவரது கிராமமக்கள் தான்.