இந்தியாவில் நடைபெறவுள்ள 8 ஆவது கபடி பிரீமியர் லீக்கின் வீரர்களுக்கான ஏலத்தில் முதன் முறையாக இலங்கை வீரரொருவர் எடுக்கப்பட்டார்.
இலங்கை கபடி வீரரான அன்வர் ஷயிட்டை தமிழ் தலைவாஸ் அணி இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாவுக்கு நேற்றைய தினம் ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியன் கபடி பிரீமியர் லீக்கின் வீரர்களுக்கான ஏலத்தில் அன்வர் ஷயிட், லஹிரு குருப்பு, ஆசிரி சந்தருவன், அஸ்லம் தம்பி ஆகிய இலங்கையர்கள் நால்வர் தெரிவாகியிருந்த நிலையில் அன்வர் ஷயிட் ஒருவர் மாத்திரமே முதற் கட்ட வீரர்களுக்கான ஏலத்தில் எடுக்கப்பட்ட இலங்கையராவார். ஏனைய மூவரையும் எந்வொரு அணியும் முதற்கட்ட ஏலத்தில் எடுக்கவில்லை.
இலங்கையைும் சேர்த்து 9 நாடுகளிலிருந்து ஒட்டு மொத்தமாக 42 வெளிநாட்டு வீரர்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றிருந்தனர்.
இதில் ஈரானிலிருந்து 14 வீரர்களும், பங்களாதேஷிலிருந்து 8 வீரர்களும், கென்யாவிலிருந்து 7 வீரர்களும், இலங்கையிலிருந்து 4 வீரர்களும், கொரியாவிலிருந்து 3 வீரர்களும், நேபாளம் மற்றும் மலேஷியாவிலிருந்து தலா 2 வீரர்களும், ஜப்பான் மற்றும் தாய்லாந்திலிருந்து தலா ஒருவருமாக வெளிநாட்டு வீரர்களுக்கான இந்த ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
12 அணிகள் பங்கேற்கும் இந்தியன் கபடி பிரீமியர் லீக் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது. ஏறக்குறைய 3 மாத காலத்துக்கு நடைபெறும் இத்தொடரின் இறுதிப் போட்டி அடுத்தாண்டு பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.