காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை ஐந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த தாக்குதல்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கப் பணியாளர்களிடையே உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலில் குறைந்தது ஒரு குழந்தை உயிரிழந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல் மூலம் ஒரு பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனிடையே சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் வான்வழித் தாக்குதலில் இரண்டு ஐ.எஸ்-கே. தலைவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை நடந்த தற்கொலை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வியாழக்கிழமை நடந்த தற்கொலை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 170 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.