எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்… என்று பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார். விஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் தான் கிருஷ்ணா அவதாரம், அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலஷ்டமியாக கொண்டாடுகிறார்கள்.
வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்டு 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.
அதற்கு முன்பு பகவான் கிருஷ்ணர் அவதாரத்தை தெரிந்து கொள்வோம்… … …
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின் சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் – தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணர் அவதரித்தார்.
தன்னை வதம் செய்யவே கண்ணன் பிறந்திருக்கிறான் என்று எண்ணினான் கம்சன். அதனால் அவனை அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். முதலில் வந்தவள் பூதனை என்ற அரக்கி. அவள் பால் தருவது போல் நடித்தாள். ஆனால் கண்ணனோ அவளிடம் பாலைக் குடிப்பது போல் குடித்து அவளைக் கொன்று விட்டார்.
அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள். பராசுரன் கொக்காகவும், தேனுகாசுரன் கழுதையாகவும், பிரலம்பன் சிறுவனாகவும், அரிஷ்டன் காளையாகவும், கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனைக்கொல்ல முயன்றனர். ஆனால் 5 வயதில் இருந்த கண்ணன் அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொன்றார்.
இதுபோன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்தாலும், அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதையும் மற்றும் கோகுலவாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கும் காளிங்கமடுவில் காளிங்கன் என்ற அசுரன் இருந்துகொண்டு அட்டகாசம் செய்து வந்தான். கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார். இந்திரனது சூழ்ச்சியினால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்து பசுக்களையும், அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார்.
கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ் பெற்றவர்கள் 18 பேர். அவர்கள் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாஹூ, விருபன், கவிநியோக்தன்.
தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும். ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது… நீர் ஏந்திவரும் பெண்களின் குடங்களை கல்விட்டு உடைப்பது… வெண்ணையை திருடி உண்பது… போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.
கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பினான். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் கண்ணன் கொன்று குவித்தார். அதனால் கோபம் கொண்ட கம்சன், “நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன் அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்” என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறினான். அமைச்சரும் அங்கு வந்தார். பலராமனும், கண்ணனும் கம்சனின் யாகசாலைக் குச்சென்றனர்.
வழியில் குவலயபீடம் என்னும் யானைக்கு மதம் பிடித்தது. அது துதிக்கையால் இரும்பு உலக்கையை தூக்கி, கண்ணனனையும், பலராமனையும் தாக்க முயன்றது. அப்போது யானையின் தந்தத்தை ஒடித்து யானையையும், பாகனையும் கொன்றார் கண்ணன்.
பின்னர் மல்யுத்த அரங்கிற்கு சென்றனர். அங்கு கண்ணனை அழிக்க சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற மல்யுத்த வீரர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்தார். இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர். ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.
ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வெட்டி சாய்ந்து விட்டு, வசுதேவர், தேவகியைக் கொல்லுங்கள் என்று அவன் கூறினான். உடனே கண்ணன் தனது 7-வது வயதில் அவன் மீது ஏறிக் குதித்து, அவனது தலையை பிடித்து தரையில் வேகமாக அடித்துக்கொன்றார். இத்துடன் கம்ச வதம் முடிந்தது.
கம்சனின் சிறையில் இருந்த தாய், தந்தை, பாட்டனார், உக்கிரசேனர் என்று அனைவரையும் விடுவித்து, கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார் கண்ணன்.
கம்ச வதத்திற்குப்பின்பு மக்கள் பயமின்றி வாழ்த்தனர். பலராமனுக்கும், கிருஷ்ணருக்கும் சாந்தி பீவி என்ற முனிவர் ஆயக்கலைகள் அறுபத்துநான்கையும் கற்றுக்கொடுத்தார். அதற்கு குருதட்சணையாக, வெகுநாட்களுக்கு முன்பு கடலில் தவறி விழுந்த எனது மகனை உயிருடன் கொண்டு வந்து கொடுங்கள் என்றார். நீண்ட போராட்டங் களுக்குப் பின்னர் எமனிடம் இருந்து குருவி னுடைய மகனை மீட்டுக் கொடுத்தனர். துவாபரயுக முடிவில் கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றது.
கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வட இந்தியாவில் இரவு 12 மணி வரையிலும் உபவாசம் இருந்து, பஜனை செய்கிறார்கள்.
ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று காலையில் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்தி மாவை கொண்டு கோலம் இட்டுக் கொள்வார்கள். வீட்டு வாசலில் இருந்து பூஜை செய்யும் இடம் வரையில், சிறு குழந்தை ஒன்று நடந்து வந்த காலடித் தடங்கள் போன்று பாதச் சுவடுகளை பதிய வைப்பார்கள்.
பூஜை அறையில் கிருஷ்ணரின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து, அதற்கு சந்தனம், குங்குமப் பொட்டு இட வேண்டும். மலர் மாலைகள் சூட்டி அலங்காரம் செய்ய வேண்டும். பூஜை ஆரம்பித்தவுடன் கண்ணன் பற்றிய பக்திப் பாடல்களை பாட வேண்டும்.
குழந்தைகளின் உடல் நலனுக்கு நோய் ஏற்படுத்தாத சீடைகள், முறுக்கு வகைகள் போன்றவற்றை யசோதை கண்ணனுக்கு வழங்கி வந்தாள். அதனை நினைவுகூறும் வகையில் வெல்லச்சீடை, உப்புச்சீடை, முறுக்கு மற்றும் லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்ற தின்பண்டங்களை செய்து பூஜையில் வைக்க வேண்டும்.
பூஜை முடிந்தவுடன் கண்ணனுக்கு ஆரத்தி கரைத்து வைக்க வேண்டும். தொடர்ந்து, வீட்டிற்கு வந்துள்ள அனைவருக்கும் நைவேத்தியம் செய்த பதார்த்தங்களை வழங்க வேண்டும்.
அன்றையதினம் மாலையில் சிலர், சிறு குழந்தைகளை கண்ணனை போன்று அலங்கரித்து மகிழ்வார்கள். கண்ணன் வேடத்தில் அந்த குழந்தைகள் வீட்டில் அங்கும், இங்கும் ஓடியாடி விளையாடும் போது அந்த கண்ணனே நம் முன் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படும்.