நாடு முடக்கப்படுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை விட முடக்காமல் இருப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பாரதூரமானவையாகும். எனவே வைத்திய ஆலோசனைக்கமைய மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களிடமிருந்து ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதோடு , புதிதாக கொவிட் வைரஸ் பரவுவதையும் தடுக்க வேண்டியுள்ளது.
இதற்கான பிரதான வழி முடக்கமாகும். தற்போது அரசாங்கத்தால் 10 நாட்கள் நாடு முடக்கப்பட்டுள்ளமை போதுமானதல்ல என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள விசேட அறிப்பில் மேலும் தெரிவித்ததாவது :
இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டும். எனவே இதற்காக செயலற்படுமாறு தெரிவித்துக் கொள்கின்றேன். அரசாங்கம் முன்னெடுத்துள்ள 10 நாட்கள் முடக்கத்திற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது.
பொருளாதார பாதிப்பு பற்றியும் சிந்திக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் முடக்கத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை விட முடக்கம் இன்மையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் அதிகமாகும்.
எனவே இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும். அதனுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பொருளாதாரத்திற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இது வரையில் எமக்கு 72 கோடி டொலர் கொவிட் தொற்று கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. எனவே நாம் வைத்திய ஆலோசனைக்கு அமைய செயற்படுவோம் என்று ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் கோருகின்றேன்.
வைத்திய ஆலோசனைக்கமைய மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுங்கள். அதற்கு சகலரதும் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என்று நான் கருதுகின்றேன் என்றார்.