கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்சியாக முடக்கி வைக்க முடியாது. நாடு விரைவாக வழமை நிலைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிடின் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
அரசாங்க தகவல்திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தாக்கத்தினை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டம் நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார காரணிகளை கருத்திற் கொண்டு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் ஏற்படும் பொருளதார தாக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனின் பொருளாதார பாதிப்பினை நாட்டு மக்கள் அனைவரும் ஏதாவதொரு வழியில் எதிர்க்கொள்ள நேரிடும். கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தி நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் இவ்விரு துறைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என தெரிவித்த அவர்,
பல்வேறு தரப்பினரது கோரிக்கைக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் கிடையாது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் கடுமையான முறையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.