ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள முதல் சுற்றில் நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய 3 அணிகளை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
இவ் வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று மற்றும் சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் சுற்று தகுதிகாணுக்கு ஒப்பானதாகும்.
முதல் சுற்றுப் போட்டிகள் ஓமான் தலைநகர் மஸ்கட்டிலும் ஐக்கிய இராச்சியத்தின் அபு தாபி மற்றும் ஷார்ஜாவிலும் அக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிவரை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் (துபாய், அபு தாபி, ஷார்ஜா) இரண்டு குழுக்களில் சுப்பர் 12 லீக் போட்டிகள் அக்டோபர் 23ஆம் திகதியிலிருந்து நவம்பர் 8ஆம் திகதிவரை நடைபெறும்.
அரை இறுதிப் போட்டிகள் நவம்பர் 10ஆம், 11ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் திகதியும் நடைபெறும்.
முதல் சுற்றில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் ஏ குழுவிலும் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூ கினி, ஓமான் ஆகிய அணிகள் பி குழுவிலும் லீக் முறையில் மோதவுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.
இலங்கை தனது முதலாவது லீக் போட்டியில் நமீபியாவை அபு தாபியிலும் (அக்டோபர் 18), இரண்டாவது லீக் போட்டியில் அயர்லாந்தை அபு தாபயிலும் (அக்டோபர் 20), கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை ஷார்ஜாவிலும் (அக்டோபர் 22) சந்திக்கவுள்ளது.
லீக் சுற்று முடிவில் ஏ குழுவில் முதலாம் இடத்தையும் பி குழுவில் இரண்டாம் இடத்தையும் பெறும் அணிகள், சுப்பர் 12 சுற்றில் முதலாவது குழுவில் இடம்பெறும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுடன் இணையும்.
பி குழுவில் முதலாம் இடத்தையும் ஏ குழுவில் இரண்டாம் இடத்தையும் பெறும் அணிகள் சுப்பர் 12 சுற்றில் இரண்டாவது குழுவில் இடம்பெறும் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இணையும்.
இந்த வருடமும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெறுகின்றன. 50 ஓவர் உலகக் கிண்ணம், இருபது 20 உலகக் கிண்ணம் ஆகிய இரண்டிலும் இந்த இரண்டு அணிகளும் மொத்தமாக 12 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. ஆனால், ஒரு தடவையேனும் பாகிஸ்தான் வென்றதில்லை.
ஏழு 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் 5 இருபது 20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பாகிஸ்தானை இந்தியா வெற்றிகொண்டுள்ளது. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததது.
_____________________________________________________________________________