இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பான முடிவை நோக்கி நகர்ந்துள்ளது.
போட்டியின் நான்காம் நாளன்று கடைசி ஆட்டநேரப் பகுதியில் 3 விக்கெட்களை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியதால் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா அதன் 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந் நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் மீதமுள்ள நிலையில் இந்தியா 154 ஓட்டங்களால் மாத்திரம் முன்னிலையில் இருக்கின்றது.
முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த இந்தியா, போட்டியின் 4ஆம் நாளான நேற்றுக் காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த கே.எல். ராகுல் 5 ஓட்டங்களுடன் வெளியேற, ரோஹித் ஷர்மா (21), விராத் கோஹ்லி (20) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
ஆனால், சேத்தேஷ்வர் புஜாரா (45), அஜின்கியா ரஹானே (65) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
எனினும் புஜாரா, ரஹானே, ரவிந்த்ர ஜடேஜா (3) ஆகிய மூவரும் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து பலமான நிலையை அடைந்துள்ளது.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தியது போன்று இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷாப் பான்ட் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பாரேயானால் ஆட்டம் பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடைவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை, இந்தியா 230 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால் போட்டியில் பரபரப்பு ஏற்படும்.
_____________________________________________________________________________