நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.
சிரவண மாத கிருஷ்ண பட்ச துவிதியை திதி கிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள் என புராணங்கள் கூறுகின்றது. அதனை அசூன்ய சயன விரதமாக அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது. இது ஒரு வித்தியாசமான விரதம்.
இதன் மூலமாக நமக்கு நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும், தம்பதிகளிடையே அன்யோன்யமும் குடும்பத்தார் இடையே சினேகித உறவும், நட்பும் நல்ல முறையில் விளங்கும். அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை எழுந்து வழக்கமாக பூஜைக்கு எப்படி தயாராவது போலவே தயாராக வேண்டும் . அவசியம் அன்று திருமால் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை தரும் ஆலய தரிசனம் சாலச் சிறந்தது.
மாலை பூஜையறையில் விளக்கேற்றி கிருஷ்ணர் – ராதை அல்லது மஹாவிஷ்ணு மஹாலஷ்மி இணைந்த விக்ரகம் அல்லது படத்தை ஒரு பலகையில் கோலமிட்டு வைத்து ஆவாகனம் செய்ய வேண்டும். அதனைப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்பூஜையை தனியாகச் செய்வதைவிட, தம்பதிகளாக அமர்ந்து செய்வது உத்தமம். ரங்கநாத அஷ்டகம் கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். ஏலக்காய், குங்கும பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும்.
அப்போது தாலாட்டுப்பாட வேண்டும்.
“மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!”
என்று பாடி, பள்ளி அறையைச் சாத்திவிட்டு இரவு பகவான் சிந்தனையோடு படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலை எழுந்து, முறையாகப் புனர் பூஜை செய்து, கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி விக்கிரஹம்படம், தக்ஷிணை, வெற்றிலை பாக்கு பழம் புஷ்பம் வைத்து தானம் செய்து விட வேண்டும். இந்த விரதத்தை எல்லோரும் கடைப் பிடிக்கலாம். நன்றாக தூக்கம் வருபவர்களும் கூட.
_____________________________________________________________________________