முகக்கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்திற்கமைய கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத அல்லது முகக்கவசத்தை முறையாக அணியாத நபர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
முகக்கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சகல நபர்களும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று 2020 ஒக்டோபர் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்திற்குரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நபரொருவர் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடுவாராயின் அவர் தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டம் மற்றும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் தண்டனை சட்டக்கோவையின் 264 உறுப்புரைக்கமைய குற்றமிழைத்தவராகக் கருதப்படுவார்.
இது பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடிய குற்றம் ஆகும். அதற்கமைய சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சகல பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்திருந்தாலும் அதனை முறையாக அணிந்திருக்காவிட்டால் அதனையும் குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
_____________________________________________________________________________