‘பாடும் நிலா’ எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் முதலாமாண்டு நினைவுத்தினத்தையொட்டி, அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள மெல்பர்ன் நகரில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் நினைவஞ்சலி நிகழ்ச்சியொன்று நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள மெல்போர்ன் நகரில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது.
பன்னிரண்டாம் ஆண்டாகத் தொடரும் இந்த விழா இந்த ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை நடைபெறுகிறது.
கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இணைய வழியில் இந்த விழா நடைபெறுகிறது.
இதில் சிறந்த நடிகர், சிறந்த படத்திற்கான பிரிவில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் இடம்பெற்றிருக்கிறது.
இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக ஒகஸ்ட் 15ஆம் திகதியன்று அங்குள்ள பெட் ஸ்கொயர் என்னுமிடத்தில் இசைக் கலைஞர்கள் பலர் பங்குபற்றும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மெல்போர்ன் நகரில் பிரபலமான இசைக்கலைஞர்களான மாளவிகா ஹரிஷ், திவாகரன், லட்சுமி ராமசாமி, கௌசிக் கணேஷ் உள்ளிட்ட பலர் மறைந்த ‘பாடும் நிலா’ எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை பாடி, அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று மறைந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் இசையஞ்சலி செலுத்துவது அவருடைய இரசிகர்களும் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் அமையும் என திரையிசையுலகினர் தெரிவிக்கிறார்கள்.