நல்லூரான் கொடியேற்ற நிகழ்வை நேரில் காண வந்த அடியவர்களை ஆலய வளாகத்தினுள் அனுமதிக்க பொலிஸார் தடை விதித்தமையால், பொலிஸாருக்கும் அடியவர்களுக்கும் இடையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்தினை நேரில் காண்பதற்காக பல அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்களை ஆலய சூழலுக்குள் பொலிஸார் அனுமதிக்கவில்லை.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆலயத்திற்கு அடியவர்களை வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தது.
அத்துடன் ஆலய நிர்வாகம் சார்பில் கொடியேற்ற நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதேவேளை யாழ். மாநகர சபை, சுகாதார பிரிவு என பல தரப்பினராலும் , ஆலய சூழலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையிலையே குறித்த அறிவித்தல்களை செவி சாய்க்காத பலர் ஆலய கொடியேற்றத்தினை நேரில் காண்பதற்காக வந்திருந்த நிலையில் அதற்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை.
நல்லூரானை தரிசிக்க வந்த அடியவர்கள் பொலிஸார் முன்னிலையில் வீதியில் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி , மலர் தூபி வணங்கி சென்றனர்.
கொடியேற்ற நிகழ்வு முடிவடைந்ததும் , நல்லூரானுக்கு உடைக்க கொண்டு வந்திருந்த சிதறு தேங்காயை, பொலிஸாருக்கு முன்பாக வீதியில் உடைத்து , வீதியில் கற்பூரம் கொளுத்தி , நல்லூரானுக்கு தூவ கொண்டு வந்திருந்த மலர்களை வீதியில் தூவி , வீதியிலையே விழுந்து வணங்கி சென்றனர்.
இதனால் கொடியேற்றம் முடியும் வரையில் பக்தர்கள் வீதிகளில் அமர்ந்திருந்து விட்டு திரும்பிச் சென்றனர்.
_____________________________________________________________________________