கொரோனாவின் மூன்றாவது அலை விரைவில் தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கும் வேளையில், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.
கொரோனாத் தொற்று ரத்த குழாய் தொடர்புடைய பாதிப்பு என்பதாலும், ரத்தம் உறைந்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது என்பதாலும், வாஸ்குலர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் எனப்படும் ரத்த நாள மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை நோயாளிகள் பெற வேண்டும்.
மேலும் கொரோனாத் தொற்றின் இரண்டு அலைகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தையும், செய்ய தவறிய விடயங்களை சீராக்கினால் மூன்றாவது அலையிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் வைத்தியசாலைக்கு வருவோரில் இதயம், நுரையீரல், ரத்த நாள பாதிப்பு போன்ற இணை குறைபாடுகளுடன் இருப்பவர்கள்தான் கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக நுரையீரல், இதயம், சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள் தான் கொரோனாத் தொற்றின் காரணமாக உயிரிழப்புக்கு ஆளாகிறார்கள்.
அதனால் இத்தகைய பாதிப்புள்ளவர்களை பிரத்யேகமாக அவதானித்து, அவர்களுக்குரிய சிகிச்சையை வழங்க வேண்டும். மேலும் இவர்கள் நுரையீரலை சுத்தப்படுத்துவது, பைபர் ஓப்டிக் பிராங்கோஸ்கோப் மற்றும் ட்ராக்கியா சுத்தப்படுத்தும் பயிற்சியைப் பெற்ற மருத்துவர்களின் ஆலோசனையையும் பெறவேண்டும்.
நோயாளிகளின் சளியை பரிசோதனை செய்தபிறகு அவர்களுக்கு எம்மாதிரியான நோய்க்கிருமி தாக்கி இருக்கிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
அதே தருணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயம் என நோயாளிகளிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். மேலும் இவர்களுக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே உயிர்காக்கும் மருந்தான ஸ்டீராய்ட் மருந்தை வழங்க வேண்டும்.
நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. உடலின் குருதியின் அளவு குறைவாக இருந்தாலும் கூட மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு இதய பாதிப்பு, ஓஸ்துமா, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை இருந்தாலும் கூட மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டவுடன் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை உறுதி படுத்திய பிறகே உயிர்காக்கும் எக்மோ உள்ளிட்ட சிகிச்சையை வழங்க வேண்டும்.
மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தி இருக்கும் தற்காப்பு மருத்துவ நடைமுறைகளை உறுதியாக தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவை அனைத்தையும் மேற்கொண்டால் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
தொகுப்பு : அனுஷா
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news