நிலச்சரிவில் ஒரு சரக்கு வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கி உள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கின்னார் மாவட்டத்தின் ரெக்காங் பியோ – சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஒரு சரக்கு வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கி உள்ளன. இந்தோ – திபெத் எல்லை காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலை நிலவரப்படி, ஒருவரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும், இடிபாடுகளில் சுமார் 30 பேர் சிக்கி புதைந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூரை தொடர்புகொணடு நிலச்சரிவு பற்றி விசாரித்தனர். மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு தரப்பில் தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினர்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news