கொவிட் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்கு? ஆரம்பத்திலேயே மக்களுக்கு தடுப்பூசியை வழங்காமல் பாணியை அருந்தியமை, ஆற்றில் மண் குடத்தை உடைத்தமை உள்ளிட்ட செயற்பாடுகளே தற்போதைய அபாய நிலைக்கான காரணம் ஆகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில, கொவிட் தொற்றின் காரணமாக நாட்டில் 5000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2020 மார்ச்சில் கொவிட் பரவல் ஆரம்பித்த போதே வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு தடை விதிக்குமாறு நாம் கோரிய போதிலும், அரசாங்கம் அதனை செவிமடுக்கவில்லை. ஆரம்பத்திலேயே தடுப்பூசியைக் கொள்வனவு செய்யுமாறு வலியுறுத்திய போது சபாநாயகர் , சுகாதார அமைச்சர் உள்ளிட்ட ஏனைய அமைச்சர்கள் தம்மிக பாணத்தை அருந்தினார்கள். சுகாதார அமைச்சர் ஆற்றில் மண் குடத்தை உடைத்தார். நாடு தற்போது இந்தளவிற்கு அபாய நிலைமையை அடைந்துள்ளமைக்கான காரணம் இதுவே ஆகும்.
தற்போது கடவுளிடம் பொறுப்பை ஒப்படைப்பதாகக் கூறுகின்றனர். கடவுளிடம் பொறுப்பை ஒப்படைப்பதென்றால் அரசாங்கம் எதற்கு ? விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை முடக்குமாறு வலியுறுத்துகின்ற போதிலும் , அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. வைத்தியர்களின் கோரிக்கைகளும் ஆலோசனைகளும் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுகின்றன. தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிப்பதானால் அரசாங்கம் எதற்கு ? சுகாதார அமைச்சு எதற்கு?
இலங்கையில் பால்மா இல்லாத முதலாவது யுகம் ராஜபக்ஷ யுகமாகும். எதிர்வரும் சில தினங்களில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும் நிதிப்பற்றாக்குறை ஏற்படும். 21 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஷாக்களே இலங்கையின் பொருளாதாரம் மறைப்பெருமானத்தில் செல்லக் காரணமாகும். தற்போது சந்தைகளில் பால்மா , சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட சீனி சில்லறை கடைகளில் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காகவா ராஜபக்ஷாக்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது ? இவை அனைத்திற்கும் அடுத்த தேர்தல் முடிவுகள் பதிலளிக்கும் என்றார்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news