‘பச்சை என்கிற காத்து’ படத்தில் நடித்த மலையாள நடிகை சரண்யா சசி கொரோனாத் தொற்று பாதிப்பு பின்னரான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மலையாள திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா சசி. 35 வயதாகும் இவருக்கு 2012ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பதினோரு முறை சத்திர சிகிச்சைகள் செய்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அவருக்கு மலையாள சின்னத்திரை நடிகர்கள் சங்கம் தேவையான உதவியை அளித்து வந்தது. மூளையில் கட்டி ஏற்பட்ட அவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பும் உண்டானது.
இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த மே மாதம் 23ஆம் திகதி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரின் நிலைமை மோசமடைய உயிர்காக்கும் கருவியின் உதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில் நடிகை சரண்யாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் தோழியும், நடிகையுமான சீமா நாயர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் சரண்யா நலமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news