பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி நேற்று அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ்முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 கோயில்களில் நேற்று “அன்னை தமிழில் அர்ச்சனை” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியகோவிலிலும் இந்த திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி நேற்று அர்ச்சனைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சாமி தரிசனம் செய்தனர். பெரியநாயகி அம்மன், வராகிஅம்மன், சுப்பிரமணியர், விநாயகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டன. மேலும் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதில் அர்ச்சனை செய்பவர்களின் பெயர், அவர்களது செல்நம்பர் இடம் பெற்றுள்ளது.
மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று, நீதிமன்ற உத்தரவுப்படி தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டது.
மேலும் எல்லா கோவில் கருவறையிலும் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வந்த நிலையில், நேற்று பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்யப்பட்டதை அனைத்து அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறும்போது, சாமிக்கு தமிழில் அர்ச்சனை செய்யும்போது நமக்கும் எளிதாக புரிந்தது. இந்த திட்டத்தை வரவேற்கிறோம் என்றனர். அர்ச்சகர்கள் கூறும்போது, தமிழில் சங்கல்பமும், அர்ச்சனையும் சாமிகளுக்கு செய்யப்படும். பக்தர்கள் தங்களது விருப்பபடி தமிழ், சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம் என்றனர்.
இதேபோல் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news