மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் புண்ணிய தலமாக கொடுமுடி திருத்தலம் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டிருக்கும் ஒரே ஆலயமாக இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக இருப்பதாக ஐதீகம். அதுபோல இங்கு மலையின் முடியே சிவலிங்கமாக காட்சியளிப்பதால், இது ‘கொடுமுடி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை ‘மகுடேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். மகுடேஸ்வரரின் திருக்கல்யாணத்தைக் காண்பதற்காக, படைப்புக் கடவுளான பிரம்மதேவனும், காக்கும் கடவுளான திருமாலும் இந்தத் திருத்தலத்திற்கு வந்ததாக தல வரலாறு சொல்கிறது.
ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது. அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர். ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை சிறு சிறு துண்டுகளாகி, நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உருவானதே கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்று சொல்லப்படுகிறது.
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் ‘பிரம்மபுரி’ என்றும், திருமால் பூஜித்ததால் ‘அரிகரபுரம்’ என்றும், கருடன் இத்தல இறைவனை பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் ‘அமுதபுரி’ என்றும் இந்த தலத்துக்கு பல பெயர்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட இந்த ஆலயம், தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில், 210-வது திருத்தலமாகத் திகழ்கிறது.
கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிலர் இந்த மரம் அதையும் விட பழமையானது, இதன் வயதை கணக்கிட முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் மூன்று முகம் கொண்ட பிரம்மதேவனை தரிசனம் செய்யலாம். வன்னி மரத்தின் அடியில் இவர் தரிசனம் தருகிறார். ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷம். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தற்போதும் நடைபெற்று வருகிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் இதுபோன்று செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிககப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், அந்த தோஷங்கள் விரைவில் நீங்கும். மேலும் திருமணத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். குழந்தைப் பேறு கிடைக்கவும் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
இந்தக் கோவிலில் வேப்பமரமும், அரசமரமும் இணைந்துள்ள மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். இவருக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஈரோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கொடுமுடி உள்ளது. கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையம் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது.