பென்ஸ்டோக்ஸின் மனநலத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் என்று எம்.சி.சி. தலைவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முனனாள் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ், தனது மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையின்றி இடைவெளி எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் விரல் காயத்தில் இருந்து குணமடைந்து, தனது மன நலனில் கவனம் செலுத்த அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற ஓய்வு எடுத்து வருவதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) வெள்ளிக்கிழமை அறிவித்தது,
இதனால் இந்த வாரம் ட்ரெண்ட் பிரிட்ஜில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஸ்டோக்ஸ் இழக்க உள்ளார்.
மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக ஒரு விளையாட்டிலிருந்து விலகிய சமீபத்திய உயர்நிலை நட்சத்திரம் ஸ்டோக்ஸ் ஆவார்.
அண்மையில் நவோமி ஒசாகா மற்றும் சிமோன் பைல்ஸ் ஆகியோர் தங்கள் மன நலனில் கவனம் செலுத்த சர்வதேச போட்டியில் இருந்து விலகினர்.
இந் நிலையில் ஸ்டோக்ஸின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே குமார் சங்கக்கார, “அவரது மன நலத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.