கொரோனா வைரஸ் தொற்று ஜப்பானில் அதிகரித்து வரும் நிலையில், பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டோக்கியோவில் மட்டுமல்லாமல் மேலும் பல பிராந்தியங்களுக்கும் அவசர கால சட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய டோக்கியோவை சூழவுள்ள பிரதேசங்கள் மற்றும் ஒசாக்கா ஆகிய நகரங்களும் அவசர கால சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னர் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஜப்பான் கணிசமான வெற்றியை பெற்றிருந்தது
தற்போது, மீண்டும் தொற்று பாரிய அளவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன் முறையாக நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் டோக்கியோவிலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.
அதிகமான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இடம்பெறும் டோக்கியோவின் பல பகுதிகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அந்த பகுதிகளில், இன்று 3 ஆயிரத்து 300 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வீரியம் கூடிய ‘டெல்டா’ தொற்றாளர்களும் அவர்களில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்பு கொண்ட 27 பேருக்கு புதிதாக தொற்று இனம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமானது முதல் இதுவரை 200 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.