இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி-20 கிரக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, வரையறுக்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
அதன் பின்னர் ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 38 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
தொடர்ந்து இரண்டாவது ஆட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகவிருந்தது. எனினும் போட்டிக்கான நாணய சுழற்சி மேற்கொள்ளப்படுவதற்கு சிறுதி நேரத்திற்கு முன்னர் குருனல் பாண்டியா கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை மேற்கொண்டமையினால் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
குருனல் பாண்டியா தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அணியின் ஏனைய வீரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எவரும் கொரோனா தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்ற தகவல்கள் வெளியானது.
இந்த சாதகமான முடிவினையடுத்தே இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி நேற்றிரவு கொழும்பில் ஆரம்பமானது.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா இலங்கை அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் திக்குமுக்காடிப் போனது.
இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களை மாத்திரமே இந்திய அணியினரால் பெற்றுக் கொள்ள முடிந்தது.
133 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றியை பதிவுசெய்தது.
இந் நிலையில் தொடரின் தீர்மானமிக்க மூன்றாவது டி-20 போட்டி இன்றைய தினம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
நேற்றைய போட்டியின் வெற்றி இலங்கைக்கு புதிய வேகத்தை அளித்துள்ளதுடன், அணியின் சகலதுறை ஆட்டக்கரரான இசுரு உதான இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும்போது ஏற்பட்ட உபாதைக்கு உள்ளானர்.
இசுரு உதான இன்றைய ஆட்டத்தில் இடம்பெறாவிட்டால், தனஞ்சய லக்ஷான் அல்லது இஷான் ஜெயரத்ன அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.