இன்றைய திகதியில் எம்மில் பலரும் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான நேரங்கள் இல்லங்களிலேயே இருக்கிறோம். இதன் காரணமாக ஒவ்வாருவரும் உடல் எடையை சீராக பராமரிப்பதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும், உடல் எடையை சீராக பேணாததன் காரணமாகவும் சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஓன்லைன் வழியாக கல்வி கற்கும் பிள்ளைகள் முதல் இளம் பருவ வயதினர் வரை உடல் எடை அதிகரிப்பு என்பது பாரிய பிரச்சினையாக வளர்ந்து வருகிறது. வேறு சிலரோ சிக்ஸ் பேக், எய்ட் பேக் என தசைகளை வலிமைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக உடலுக்கு தேவையான சமச்சீரான சத்துள்ள உணவை சாப்பிடாமல், கொழுப்பு சத்துள்ள உணவைக் குறைத்துக் கொள்கின்றனர்.
இதன் காரணமாக உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. அத்துடன் உடல் எடையில் சமச்சீரற்றத்தன்மை ஏற்படுகிறது. வேறுசிலருக்கு உடல் எடை அதிகரிக்கிறது.
அதிகப்படியான உடல் எடை என்பது, நம் உடல் சேர்த்து வைக்கும் கொழுப்பு. இது திசுக்களில் படர்கிறது. அதிகப்படியான கலோரி தவிர, உடல் சக்தியில் சமச்சீரற்ற தன்மை, மரபியல் காரணங்கள், தைரொய்ட் கோளாறு, மதுப் பழக்கம், மனநலப் பிரச்னைகள், உடற்பயிற்சியின்மை, பேலியே, கீட்டோ, வேகன் எனப்படும் பல்வேறு வகையினதான உணவு முறையை பின்பற்றுவது, துாக்கமின்மை, பசியைக் கட்டுப்படுத்துதல் என பல்வேறு காரணிகளால் எம்முடைய உடல் எடை அதிகரித்து, உடற்பருமன் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
கொழுப்பு செல்கள், இன்சுலின் உட்பட அனைத்து ஹோர்மோன் சுரப்பியின் செயல்பாடுகளும், இயல்பான எம்முடைய உடலின் தேவையைதக் கடந்து அதிக அளவில் சுரக்கத் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக செல் வளர்ச்சிக்கான காரணிகளும் அதிகமாகின்றன. இதனால் இரண்டு, நான்கு, எட்டு என்று இரண்டின் மடங்காக பிரியும் இயல்பான செல் பிரிதல் நிகழ்வு, இயல்பான அளவை விட கூடுதலாக பன்மடங்காக பிரிகின்றன.
இத்தகைய அசாதரணமான பிரிதல் அடிக்கடி நிகழ்வதால், புற்றுநோய் செல்கள் உண்டாகுவதற்கு காரணமாக அமைகிறது. அத்துடன் மார்பகம், கணையம், சிறுநீரகம், கருப்பை, கல்லீரல், மூளை, தைரொய்ட் சுரப்பி, பித்தப்பை, கருக் குழாய் என உடலின் பத்திற்கும் மேற்பட்ட உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
டொக்டர் தினகரன்
தொகுப்பு அனுஷா.