கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார். கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து பாரதிய ஜனதாவில் புதிய முதல்- மந்திரியை தேர்வு செய்வதற்காக மேலிட பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் தர்மேந்திரபிரதாப், கிஷன் ரெட்டி ஆகியோர் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் பெங்களூரில் உள்ள கேப்பிட்டல் ஓட்டலில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடியூரப்பாவும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் சட்டமன்ற பாரதிய ஜனதா தலைவராக (முதல்-அமைச்சர்) பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து பசவராஜ் பொம்மை, எடியூரப்பா மற்றும் தலைவர்கள், கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.
பசவராஜ் பொம்மை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று பகல் 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். அதன்படி இன்று கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி கூடத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.