நாட்டில் நாளொன்றில் வாய்ப்புற்றுநோயால் 2 அல்லது 3 உயிரிழப்புகள் இடம்பெறுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
புற்றுநோயினால் இறப்பு வீதம் அதிகரித்து வருவதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தற்போது அடையாளம் காணப்படுபவர்களில் 60 சதவீதமானோர் புற்றுநோயின் இறுதிநிலையினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில் மாத்திரம் 2,700 புதிய வாய்ப்புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
2006ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபை சட்டத்திற்கமைய அனைத்து வகையான புகையிலை அடங்கிய பாக்கு தயாரிப்புக்களை இறக்குமதி செய்தல், உற்பத்திசெய்தல், விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வித மெல்லும் பாக்கு மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. இதனால் குறித்த உற்பத்திகளின் பாவனையை தடுக்குமாறும், பாக்கு சார்ந்த உற்பத்திகளைப் பாவனை செய்திருந்தால் அல்லது தற்போது பாவனை செய்பவராயின் தாமதிக்காமல் உனடியாக மருத்துவரை நாடி வாய்ப்பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆரம்ப நிலையில் குறித்த புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் அதிகரிப்பை தடுக்க முடியும் எனவும் தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.