38 வருடங்களுக்கு முன்னர், 1983 யூலை 23ம் திகதி நள்ளிரவில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகன அணி ஒன்றின் மீது நிகழ்த்தப்பட்டு 13 சிப்பாய்கள் பலியான குண்டுத் தாக்குதலுக்கு, எதிர் நடவடிக்கையாக, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவும், அவரின் அரசாங்கமும் தமிழ் மக்கள் மீது தொடுத்த, பிரகடனப்படுத்தப்படாத போரின் தொடர் விளைவுகள் மற்றும் எதிர் விளைவுகளின் தாக்கங்களில் இருந்து இலங்கைத் தீவு இன்னமும் விடுவிக்கப்படவில்லை. என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் அவர் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…..
குண்டுத் தாக்குதல் நிகழ்ந்து 24 மணித்தியாலயங்களுக்குள் தொடுக்கப்பட்டு, அடுத்து வந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 35 தமிழ் அரசியல் கைதிகளையும், தொடர்ந்து மேலும் 48 மணித்தியாலயங்களுக்குள் 18 தமிழ் அரசியல் கைதிகளையும் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் கோரமாக நரபலி கொண்ட அரச பயங்கரவாதம், அந்த நாட்களில் இருந்து இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் நினைவுகளை விட்டு நீங்க மறுத்து நிற்கின்றது
அந்த இருண்ட நாட்களில், தலைநகர் கொழும்பிலும், மற்றும் தென் இலங்கையிலும், மத்திய மலைநாட்டிலும் உயிர்கள் பறிக்கப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் தமிழ் மக்கள் சந்தித்த அநாதரவான நிலைமையின் நிழல்கள் இப்போதும் நீடித்து நிற்கின்றன.
1958, மற்றும் 1977 என சுமார் 20 ஆண்டு கால இடைவெளியில், இரண்டு வெவ்வேறு பேரினவாத அரசியல் அணிகளின் ஆட்சிக் காலங்களில், அரங்கேற்றப்பட்ட அக்கிரமங்கள் எல்லாம், 1983ன் பின்னர் சிறிய நிகழ்வுகளாயிப் போயின என்பது தான் வரலாறு.
இந்த சோக வரலாற்றில், அரச பயங்கரவாதத்தில் இருந்து தப்பி வந்த தமிழ் மக்களுக்கு தஞ்சம் தத்திருந்த எமது தாயக வாழ்விடம், தொடர்ந்து சட்டவிரோத பேரினக் குடியேற்றங்களால் ஊடுருவப்பட்டு, துண்டாடப்படும் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
1983ல் தமிழ் மக்கள் மீது போர் தொடுக்கப்பட்ட போது பிறந்திராதவர்களும், சிறுபிள்ளைகளாக ஓடித் திரிந்தவர்களும் இலங்கைத் தீவின் இன நெருக்கடிக்கு தமிழர் தரப்பிலிருந்து தீர்வு ஒன்றைக் கொண்டு வர முடியுமா என்ற சிந்தனையின் முனைப்பில் தமக்கு தெரிந்த வழிகளில் இன்று பிரிந்து நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றினால் தமக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட முன்னரே, 1983 ஆடி மாதம் 25ம் திகதி பிற்பகல் வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெரும் சுவர்களுக்கு உள்ளே சித்திரவதை செய்யப்பட்டு சிதைத்துக் கொலை செய்யப்பட்ட மாவீரர்கள் குட்டிமணியும், ஜெகனும் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த தலைவன் தங்கத்துரையும், மற்றும் அவர்களைப் போன்ற 50 தமிழ் அரசியல் கைதிகளும், இரு தொகுதியினராக, ஒரு நாள் இடைவெளியில் மனித விலங்குகளின் பிடியில் சந்தித்த அந்த கடைசி வினாடிகள் உணர்வுள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் இப்போது நினைத்தாலும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பாக சாகாவரம் பெற்று நிற்கின்றன.
இந்த நிகழ்வுக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண் எதிரே நிற்கும் இந்த சோக நாட்களில், ஜனநாயக வழியில் தமிழ் இனத்தின் விடுதலை எழுச்சியை வழி நடாத்திச் செல்லக்கூடிய நெஞ்சுரமும் நேர்மையும் கொண்ட தலைமைக்காக வரலாறு காத்திருக்கின்றது. என்று குறிப்பிட்டுள்ளார்