வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காத்திட வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொது மற்றும் மறுவாழ்வு துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, செஞ்சி கே. எஸ். மஸ்தான், தலைமை செயலாளர் வெ இறையன்பு உள்ளிட்ட பலரும் பங்குபற்றினர்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது.
‘ வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலன் பேணவும், அங்கு பாதிப்புக்குள்ளாகும் தமிழர்களுக்கு உதவிடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் என்ற நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழி காட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். முகாமில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள், குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாதாந்திர பண கொடையை உயர்த்தி அளித்திட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு காப்பீடு திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லாத தொலைபேசி உதவி மையம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதுடன் வெளிநாடுவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை இணையவழியில் கற்பிப்பதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.’ என முதல்வர் மு. க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.