தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்திருக்கின்றது என்பதே எனது நிலைப்பாடாகும்.
தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது தற்போது தெற்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை மாத்திரம் வழங்கக்கூடியவாறான வெள்ளை யானையாக மாறியிருக்கின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அதுமாத்திரமன்றி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் ஓரங்கமாகக் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தையும் அதுகுறித்த சட்டத்தையும் தற்போதைய அரசாங்கம் முழுமையாக இல்லாதொழிக்காதிருப்பதற்கான காரணம் சர்வதேச அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்பதனாலேயேயாகும். இருப்பினம் தற்போது அந்த அலுவலகத்திற்கான நிதிவழங்கல் நிறுத்தப்பட்டிருப்பதன் விளைவாக அவ்வலுவலகம் இருந்தும் இல்லாத நிலையை அடைந்துள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் உலகின் ஒரு பலம்மிக்க சக்தியுடன் மாத்திரம் நெருங்கிப்பயணிப்பதுடன் ஏனைய பலம்வாய்ந்த சக்திகளைப் புறந்தள்ளிச்செயற்படுவதனால் எதிர்வருங்காலத்தில் எமது நாடு பூகோள அரசியல் நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம் என்று குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர, இந்தியாவும் சீனாவும் மிகமுக்கிய உலக பொருளாதார சக்திகளாக வலுப்பெற்றுவரும் நிலையில், அவற்றுடன் சமாந்தரமான பொருளாதாரத் தொடர்புகளையும் நெருக்கத்தையும் பேணுவது அவசியமாகும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.
நாட்டின் தற்கால அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இலங்கையின் இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பினால் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
ஜுலை மாதம் 23 ஆம் திகதி எமது நாட்டின் வரலாற்றில் பதிவான ஓர் கரிநாளான ‘கறுப்பு ஜுலையை’ நினைவுகூரும் தினமாகும். நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு அதனையும் ஓர் காரணமாகக் குறிப்பிட முடியும். ஆரம்பத்தில் இலங்கையைப்போன்று சிங்கப்பூரை மாற்றியமைக்கவேண்டும் என்று லீ குவான் யூ விரும்பும் அளவிற்கு எமது நாடு ஒரு சிறந்த முன்னுதாரமிக்க நாடாக விளங்கியத. இருப்பினும் சுதந்திரமடைந்ததிலிருந்து எமது நாடு இன,மத,மொழி ரீதியில் பிளவடைய ஆரம்பித்தது. ஆரம்பகாலத்தில் தமிழர்கள் தமது மொழியைப் பேசுவதற்கான உரிமையை மாத்திரமே கேட்டார்களே தவிர, அவர்கள் தனியொரு நாட்டைக் கோரவில்லை. அவ்வாறு ‘பெடரல்’ கோரிக்கையை முன்வைப்பதைக்கூட பிழையென்று நான் கருதவில்லை. ஆனால் மொழி உரிமை உரியவாறு வழங்கப்படாத நிலையிலேயே, அவர்கள் தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து கறுப்பு ஜுலை கலவரத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மேலும் வலுவடைந்தது. எனவே அத்தகைய தீவிரவாத இயக்கமொன்று எழுச்சியடைவதற்கான காரணம் சிங்களவர்களாகிய நாம்தானே தவிர தமிழர்களல்ல. இலங்கை மாத்திரமன்றி உலகின் எந்தவொரு நாட்டிலும் தீவிரவாதத்தின் மூலம் தீவிரவாதமே வலுவடையும். கறுப்பு ஜுலைக்கு முன்னரான காலப்பகுதியில் வெளிநாட்டைச்சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தன. இருப்பினும் அந்த கலவரங்களின் பின்னர் இலங்கையில் முதலீடுகளைச் செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்குத் திட்டமிட்டிருந்தவர்களும் அவற்றிலிருந்து பின்வாங்கிச்செய்தார்கள். எமது நாட்டில் கலவரங்களோ அல்லது யுத்தமோ இடம்பெறாமலிருந்திருந்தால், தெற்காசியாவில் மிகமுக்கியமான இலத்திரனியல் உபகரண உற்பத்திக் கேந்திர மையமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மாறியிருக்கும். எனினும் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்தும் போரினால் பின்னடைவைச் சந்தித்தன.
இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம், கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் ‘இலங்கையர்கள்’ என்ற அடையாளத்தின்கீழ் ஒன்றிணைத்துக்கொண்டு பயணிக்கக்கூடிய நிலையொன்று போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் உருவானது. இருப்பினும் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதனைச்செய்யாமல், யுத்தவெற்றியை சிங்கள இனத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தியதுடன், 1956 ஆம் ஆண்டில் காணப்பட்ட இன மற்றும் மதவாத சிந்தனை வலுப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக முன்னெப்போதுமில்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்கவேண்டியேற்பட்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் இவ்வருட முடிவில் சுமார் 2 பில்லியன் டொலர் கடன்களை மீளச்செலுத்தவேண்டிய நிலையில் இலங்கை இருக்கின்றது. அத்தோடு சர்வதேச வங்கிகளுக்கான தரப்படுத்தலில் எமது நாட்டின் வங்கிகள் பின்னடைந்திருப்பதுடன் அண்மையில் மூடியின் முதலீட்டுச்சேவையாளர்களால் வெளியிடப்பட்ட தரப்படுத்தலிலும் இலங்கையின் பொருளாதாரத்தின் கிளைக்கூறுகள் தொடர்பான தரப்படுத்தல் மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியும் ஏற்பட்டிருப்பதால், நாடு மிகமோசமான நிலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எனவே இப்போதேனும் ‘நான் எங்கு தவறிழைத்தோம்? இனிவருங்காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?’ என்ற விவாதம் பரவலாக ஆரம்பிக்கப்பட வேண்டும். நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கு இப்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும். இருப்பினும் அவர்களின்மீது மாத்திரம் பழியைச் சுமத்திவிட்டுத் தப்பித்துக்கொள்ளமுடியாது. மாறாக நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து ஆட்சியை முன்னெடுத்த அனைத்து அரசாங்கங்களும் நான் உள்ளடங்கலாக அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தல் வாக்குறுதிகளையும் இனவாதத்தையும் ஆதரித்து வாக்களித்த வாக்காளர்களும் இதற்குப் பொறுப்புக்கூறவேண்டும். எனவே இப்போது நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கும் நிலையில், பிறர்மீது பழிசுமத்துவதை விடுத்து மாற்றுத்தீர்வுகள் குறித்து சிந்திப்பது அவசியமாகும். ஆனால் அவை ராஜபக்ஷவை மாத்திரம் மையப்படுத்தியதாக அமையக்கூடாது. ஏனெனில் இப்போது தோல்வியடைந்திருப்பது ஜனாதிபதி மாத்திரமல்ல. மாறாக ஜனாதிபதி, அரசாங்கம், எதிர்க்கட்சி, பேரினவாதம் உள்ளிட்ட அனைத்தும் தோல்விகண்டிருக்கின்றது.
நாமனைவரும் பிரிவினைவாதப்போக்கிலிருந்து விடுபட்டு, நவீன இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் அதேவேளை, அனைத்துத் தரப்பினரும் எவ்வித வேறுபாடுகளுமின்றி ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும். முதலீடுகளை மேற்கொள்வதற்கான தகுதியை இலங்கை இழந்திருப்பதாக அண்மையில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களாக நாட்டில் நிலவும் இன,மத மற்றும் பேரினவாதம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் இருவருடகாலத்திற்குள் எமது நாட்டில் நாம் பாரியதொரு மாற்றத்தைக் கொண்டுவராவிட்டால், உலகிலேயே தோல்விகண்ட மிகச்சொற்பளவான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணையவேண்டியேற்படும். சர்வதேச முதலீட்டாளர்கள் எமது நாட்டில் உறுதிப்பாடொன்றை அவதானிக்காவிட்டால், அவர்கள் முதலீடுசெய்வதற்கான வேறு நாடுகளைத்தேடிச் சென்றுவிடுவார்கள்.
இலங்கை கொண்டிருக்கக்கூடிய விசேட சிறப்பம்சமாகவும் வாய்ப்பாகவும் அதன் அமைவிட – கேந்திரநிலைய முக்கியத்துவத்தைக் குறிப்பிட முடியும். ஆனால் தற்போது அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வெளிவிவகாரக்கொள்கை அவதானத்திற்குரியதாகக் காணப்படுகின்றது. உலகின் ஒரு பலம்மிக்க சக்தியுடன் மாத்திரம் நெருங்கிப்பயணிப்பதுடன் ஏனைய பலம்வாய்ந்த சக்திகளைப் புறந்தள்ளிச்செயற்படுவதனால் எதிர்வருங்காலத்தில் பூகோள அரசியல் நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படலாம். உலகில், குறிப்பாக ஆசியப்பிராந்தியத்தில் சீனா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளும் கொண்டிருக்கக்கூடிய பொருளாதார ரீதியான முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததாகும். அவ்விரு நாடுகளும் மிகமுக்கிய உலக பொருளாதார சக்திகளாக வலுப்பெற்றுவரும் நிலையில், அவற்றுடன் சமாந்தரமான பொருளாதாரத் தொடர்புகளையும் நெருக்கத்தையும் பேணுவது அவசியமாகும். மாறாக ஒன்றுடன் மாத்திரம் நெருங்கிச்செயற்படுவதன் விளைவாக எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடு;ம். எமது அரசாங்கத்தில், நாம் அனைத்து நாடுகளுடனும் ஒரேவிதமான, சமத்துவமான வெளிவிவகாரக்கொள்கையைப் பேணிவந்தோம். எமக்கு மிக அண்மைய நாடான இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவைப்பேணிய அதேவேளை ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சுமுகமான நல்லுறவைப்பேணினோம். அதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்ள எம்மால் முடிந்தது.
அதேபோன்று நான் இப்போது அரசியலிலிருந்து விலகவில்லை. மாறாக பாராளுமன்ற அரசியலிலிருந்து மாத்திரமே விலகியிருக்கின்றேன். குறிப்பாகக் கட்சி அரசியலைத் தாண்டி, கொள்கை ரீதியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றேன். அதன்படி நான் ஏற்கனவே கூறியதைப்போன்று ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் மதிப்பளித்துச்செயற்படக்கூடிய அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்பது என்னுடைய பிரதான நோக்கமாக இருக்கின்றது. அதனூடாக நாட்டின் அனைத்து இன,மதங்களைச் சார்ந்த மக்களினதும் பொதுவான அடையாளமாக ‘இலங்கையன்’ என்பதை உருவாக்கவேண்டும்.
மேலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்திருக்கின்றது என்பதே எனது நிலைப்பாடாகும். தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது தற்போது தெற்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களை மாத்திரம் வழங்கக்கூடியவாறான வெள்ளை யானையாக மாறியிருக்கின்றது என்பதே எனது அபிப்பிராயமாகும். எமது நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட காணாமல்போனோர் தொடர்பான சட்டம் மற்றும் அதனூடாக ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகம் என்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணங்கிக்கொள்ளப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின்கீழான முன்னேற்றகரமான விடயங்களாகும். எனினும் தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அஞ்சி, அந்தச் சட்டத்தை இல்லாமல்செய்வதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நிதியமைச்சின் ஊடாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கான நிதிவழங்கல் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
எனவே அவ்வலுவலகம் இருந்தும் இல்லாத நிலையை அடைந்துள்ளது. அதுமாத்திரமன்றி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விருப்பம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குக் காணப்பட்டபோதிலும், அக்காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷ தரப்புடன் நெருங்கிச்செயற்பட்டதன் காரணமாக அந்நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்தன என்று குறிப்பிட்டார்.