நாயாறு பகுதியில் சட்டவிரோதமாக தென்பகுதி மீனவர்கள் குடிகொண்டுள்ள பகுதியில் 34 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் இருந்து ஒருவர் புத்தளம் சென்றுள்ளார். இதனால் பாரிய சிக்கல் நிலையில் சுகாதார தரப்பு தள்ளப்பட்டுள்ளதோடு பாரிய கொத்ணியாக இது உருவெடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதியில் சட்டவிரோதமாக தென்பகுதி மீனவர்கள் குடிகொண்டுள்ள பகுதியில் இதுவரை 53 பேருக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
நாயாறு கொரோனா நிலவரம் தொடர்பில் இன்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாயாற்றுப்பகுதியில் குடியேறியுள்ள பருவகால மீனவர்கள் மீதான பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் பகுதியினை சேர்ந்தவர்கள் எதுவித பதிவுகளும் அற்ற நிலையில் நாயாற்று கரையோரப்பகுதியில் பருவகால கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்கள் தொடர்பான விபரம் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திடமோ,கிராமசேவகரிடமே இல்லாத நிலையில் குறித்த பகுதியில் கடந்த யூலை 3 ஆம் திகதி தொடக்கம் பொது முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது
இதுவரையில் 379 பி.சி.அர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 53 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசேதனையின் முடிவுகள் நேற்று (21) வெளியான முடிவுகளில் 34 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாயாற்றில் எதிர்பாராத சில கிக்கல்கள் ஏற்பட்டுள்ளது இந்த பகுதியில் தொடர்பாடல்களை திருப்திகரமாக செய்யமுடியவில்லை. அதற்கான ஒத்துழைப்பு அங்கு இல்லை நாயாற்றில் இருப்பவர்கள் எந்த முறையான பதிவுகளும் ஆவணப்படுத்தல்களும் இல்லாதவர்களாக காணப்படுகின்றார்கள்.
இது குறித்த ஆவணப்படுத்தல் இல்லாதது சுகாதார சேவைக்கு சவாலானதாக காணப்படுகின்றது.
இவ்வாறு இனம் காணப்பட்ட தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லும் போது ஏற்படும் சிக்கல் பெரும் சிரமமாக காணப்படுகின்றது.
இன்று 34 தொற்றாளர்களில் ஒருவரை காணவில்லை அதில் 33 பேரை முறிகண்டியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மாகாண முடக்கம் இருக்கும் போது ஒரு கொரோனா நோயாளி எவ்வாறு ஒரு முடக்கப்பட்ட பகுதியில் இருந்து புத்தளத்திற்கு சென்றார் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.
களநிலை சுகாதார உத்தியோகத்தர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் பேருந்தில் புத்தளத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நின்ற வாடியின் உரிமையாளர் அவர் படகு மூலம் கொக்கிளாய் சென்று அங்கிருந்து புத்தளத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இப்படியான நிலையில் சுகாதார பிரிவினர் எதிர்கொள்ளும் பாரிய சவால்களில் ஒன்று எந்த சவால்களும் ஒரு கொரோனா பரவலை நியாப்படுத்த முடியாது உரிய அதிகாரிகள் முறையான ஆவணப்படுத்தலை செய்ய வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள்
கட்டுப்பாடுகள் ஆவணப்படுத்தல்கள் இல்லாத ஒரு சமுதாயத்தில் இருந்து புறப்படுகின்ற பெருந்தொற்று மாவட்டத்திற்கும், மாகாணத்திற்கும் அல்லது நாட்டிற்கும் ஒரு பெரிய கொத்தணியினை உருவாகும் எனவே நாங்கள் சுகாதாரம் சாராத மற்றைய தரப்பினரிடம் இருந்து மிகுந்த ஒத்துழைப்பினை எதிர்பாக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.