திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மூன்று நாட்கள் நடக்கும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இதில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் வீதி உலா வந்தனர்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் மூன்று நாட்கள் நடக்கும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று சத கலச சொப்னம் மற்றும் மகாசாந்தி ஹோமம் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம், ஸ்னபன திருமஞ்சனம் நிகழ்த்தினர்.
பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர், சுவாமியின் கவசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கவசம் அணிவிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் கோவிந்தராஜ சாமியுடன் வீதி உலா வந்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் உதவி செயல் அலுவலர் ரவிக்குமார் ரெட்டி, கண்காணிப்பாளர் வெங்கடாத்ரி மற்றும் கோவில் ஆய்வாளர் முனீந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.