இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான ஆட்டம் போல் இருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 36.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் ஒருநாள் தொடரில் இந்தியா 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரமிஸ் ராஜா, முதல் ஒருநாள் போட்டியை பகுப்பாய்வு செய்துள்ளார்.
அதில் அவர் முதலாவது ஒருநாள் போட்டியை, இது ஒரு பல்கலைக்கழகத்திற்கும் பாடசாலை அணிக்கும் இடையிலான விளையாட்டு என்று கூறினார்.
ஆட்டத்தில் இந்தியர்கள் பல்கலைக்கழக வீரர்களைப் போல வலுவாக தோற்றமளித்தனர், அவர்கள் பாடசாலை அணி கிரிக்கெட் வீரர்களைப் போல விளையாடிய இலங்கை அணியினரை போராடச் செய்தனர்.
திறமை, ஆட்டத்தின் மீதான புரிதல், திட்டம் மற்றும் அதை செயல்படுத்துதல் ஆகிய அனைத்திலுமே இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
இலங்கை கிரிக்கெட்டுக்கு இது மிகச்சவாலான நேரம். ஏனெனில் சொந்த மண்ணில் தங்களுக்கு சாதகமாக பெரிய ஓட்ட இலக்கை அடிக்குமளவிற்கான ஃப்ளாட் பிட்ச்சை தயார் செய்தும் கூட, சராசரி ஸ்கோரையே அடித்தது இலங்கை அணி.
இலங்கை வீரர்கள் சுழற் பந்து வீச்சுகளை ஆடிய விதம், சுழற் பந்துகளுக்கு ஆடவே தெரியாதுபோல இருந்தது.
பொதுவாக இலங்கை வீரர்கள் சுழற்பந்துகளை திறம்பட எதிர்கொள்வார்கள். ஆனால் தற்போதைய இலங்கை வீரர்கள் அந்த நிலையை இன்னும் எட்டவில்லை என்று கூறினார்.