ஜேர்மனியில் தொடரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் தொகை 156 ஆக அதிகரித்துள்ளதாக பில்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, தென்மேற்கு ஜேர்மனிய மாநிலமான ரைன்லேண்ட்-பாலாட்டினேட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உள்ளது என்று பில்ட் வெளிக்காட்டியுள்ளது.
வட ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமை மாலை நிலவரப்படி 45 ஆக உள்ளது. அதே சமயம் பெர்ச்செஸ்கடனின் பவேரிய பிராந்தியத்தில் குறைந்தது ஒரு நபர் இறந்துள்ளார்.
அஹ்ர்வீலர் மாவட்டத்தில் மட்டும் 110 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 670 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஞாயிற்றுக்கிழமை காலை கோப்லென்ஸ் காவல் துறை வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு, ஜேர்மனியின் பவேரியாவில் உள்ள பெர்ச்ச்டெஸ்கடனர் லேண்ட் மாவட்டத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு இடையே அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
மேலும் பிராந்தியத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை டிரெஸ்டன்-ப்ராக் பாதையில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேவேளை ஜேர்மன் உள்ளடங்கலாக மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட பேரழிவில் மொத்தம் 183 பேர் உயிரிழந்துள்ளமையும குறிப்பிடத்தக்கது.