நம் தேசத்தின் கலைக்கு மதிப்பளிப்போம். கலைப் போராளிகளை கொண்டாடுவோம்.
கொரோனா காலத் தளர்வுகளின் மூன்றாம் கட்டத்தில் பொழுது போக்கு நிகழ்வுகளுக்கு கனடா அரசு அனுமதியளித்துள்ளமை பொதுமுடக்கத்தால் முடங்கியிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் தரும் செய்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அத்துடன் பொழுதுபோக்கு நிகழ்வுகள் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில், இந்தியாவில் இருந்து திரைக்கலைஞர்களும் படைப்பாளிகளும் அழைக்கப்பட்டு வருகின்றனர். இதுவும் நிகழ்வுகளுக்கு வலுச்சேர்க்கும் ஏற்பாடுகளே ஆகும்.
இந்த சூழமைவில், நம் நாட்டுக் கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் நமது கவனத்தை திருப்ப வேண்டிய நிலையில் உள்ளோம். இலங்கை நாட்டில் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் ஈழத் தமிழ் கலையை பண்பாட்டை வளர்க்கும் கலைஞர்கள் உள்ளனர்.
2009இற்கு முன்னரான காலத்தில், ஈழத்தில் இருந்து பெருமளவான கலைஞர்களும் அழைக்கப்பட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வந்தமை ஆரோக்கியமான நினைவுகளாக இருப்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
அதாவது இந்திய கலைஞர்களுக்கு சமமான இடத்தில் ஈழக் கலைஞர்களும் அழைக்கப்பட்டமை நினைவுகொள்ள வேண்டியதும், கற்றுக்கொள்ள வேண்டியதும் ஆகும். இதுவும் தாயகத்திற்கு செய்கின்ற மகத்தான பங்களிப்பு எனலாம்.
இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களுக்கு ஈடாக ஈழக் கலைஞர்களும் கலைச் சாதனை புரிந்து வருகின்ற நிலையில், அவர்களையும் அழைத்து மதிப்பளிப்பது நமது கடமை ஆகும். அதுவும் இன்றைய காலத்தில் தமிழ் தேசியத்திற்கான பங்களிப்பும் பணியும் எனலாம்.
கிருபா கிஷான்