ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல நாடுகளில் தளர்த்தப்பட்டிருப்பதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை குறித்த அச்சம் உலக நாடுகளில் நிலவி வரும் நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதுதொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பேசுகையில்,
‘ மக்களின் நடமாட்டம் பொதுவெளியில் அதிகரித்திருப்பதாலும், முறையான பொது சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததாலும் டெல்டா வகையான வைரஸ் பரவி வருகிறது. துரதிருஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில் உள்ளோம். வைரஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
இதனால் பலவகையான கொரோனா பரவுகிறது. டெல்டா வகையான கொரோனா நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது உள்ளது. இப்போது இல்லை என்றாலும், அதிகம் பரவக்கூடிய கொரோனாவாக அது மாறும் என எதிர்பார்க்கிறோம். அண்மைக்காலமாக ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்கக் கண்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கொரோனா இறப்பு எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.’ என்றார்.
இதனிடையே கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வாரங்களாக இறப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு அனுஷா