‘அருவி’ பட வெற்றி பெற்று கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் ‘வாழ்’ கதையோடு வந்திருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். இந்த மாதம் 16ம் தேதி ‘Sony Liv’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படம் குறித்து பிபிசி தமிழுக்காக அவரிடம் பேசினோம்,
‘அருவி’ படம் வெளியாகி நான்கு வருடங்களுக்கு பிறகு ‘வாழ்’. படம் குறித்து இயக்குநராக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
“அருவி படத்திற்கு கிடைத்த வரவேற்பு வெறும் பாராட்டுகளாக கடந்து செல்லாமல் எனக்கு பொறுப்புணர்வை அதிகப்படுத்தியது. மக்கள் இவ்வளவு அன்பு கொடுக்கும் போது அதற்கு ஏற்றார் போல அடுத்த படம் இருக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அப்படி யோசிக்கும் போது இப்போது மக்கள் அனைவரும் இருக்கக்கூடிய மனநிலைக்கு ‘வாழ்’ பேசக்கூடிய கதை அனைவருக்கும் தேவையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டாவது படமாக ‘வாழ்’ செய்ய தயாரானோம்.
நிச்சயம் ‘அருவி’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக ‘வாழ்’ இருக்கும். இரண்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. ‘வாழ்’ முழுக்க முழுக்க பயணம் குறித்து பேசும் படம். எல்லாம் வயதில் இருப்பவர்களுக்கும் நிச்சயம் படம் பிடிக்கும், நல்ல அனுபவம் கொடுக்கும்”.
‘வாழ்’தான் உங்களுடைய முதல் கதையா இது உருவானது குறித்து சொல்லுங்கள்?
“ஐடியில் வேலை செய்யும் என்னுடைய நண்பர் பிரகாஷ். அவருடைய கதாப்பாத்திரத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதைதான் ‘வாழ்’. அதோடு சேர்த்து 2010ஆம் வருடம் நான் சந்தித்த மனிதர்கள், எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இதெல்லாம் சேர்ந்த தொகுப்புதான் ‘வாழ்’. நிஜத்தில் நாம் பார்த்த மனிதர்கள் திரையில் நாம் சந்தித்திருக்க மாட்டோம். இந்த படத்தில் அதுபோன்று நிறைய கதாப்பாத்திரங்கள் இருப்பார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தோடும் தங்களை நிச்சயம் பார்வையாளர்கள் பொருத்தி பார்ப்பார்கள்”.
அடுத்தடுத்த படங்களுக்கான இடைவெளி எதனால்?
“கடந்த வருடம் பிப்ரவரி மாதமே தியேட்டரில் படத்தை வெளியிட முடிவு செய்திருந்தோம். மேலும் சில திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப திட்டமிட்டிருந்தோம். ஆனால், இந்த கொரோனா சூழல் காரணமாக எல்லாமே தள்ளிப்போனது. இப்போது ஓடிடியில் வெளியாவதன் மூலமாக எல்லா தரப்பினருக்கும் போய் சேர இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி”.
‘அருவி’ படம் & ‘வாழ்’ ட்ரைய்லரும் சரி சினிமாவுக்கான வழக்கமான பல கமர்ஷியல் விஷயங்கள் தவிர்த்து எடுக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் இதுபோன்ற படங்கள் எடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா?
“சாதாரண சினிமா ரசிகராக நாம் படத்தில் எதிர்ப்பார்க்கக்கூடிய சில விஷயங்கள் இருக்கும் இல்லையா? அது எல்லாவற்றையும் கொடுக்கக்கூடிய படங்கள்தான் நம்மையும் திருப்தி படுத்தும். அந்த மாதிரியான படங்களை பார்த்து வளர்ந்த் நபர்தான் நான். அதனால், நான் எடுக்கும் படங்களும் அப்படி மக்களுக்கு ஜனரஞ்சகமாக பிடிக்க வேண்டும் என்பதுதான் சினிமாவில் என் எண்ணமும்.
என் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த படம் எதாவது ஓர் உணர்வு கொடுத்து அதில் இருந்து எடுத்து கொள்வதற்கு எதாவது ஒன்று இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன்”.
‘வாழ்’ பட ட்ரைய்லர், முன்னோட்டம் (Preview Show) பார்த்தவர்கள் பாராட்டுகள் தெரிவித்து இருந்தார்கள். இதில் மறக்க முடியாதது?
“படம் பார்த்ததும் அவர்களுக்கு நடக்கும் ஓர் உணர்வு இருக்கிறது இல்லையா? அது குறித்துதான் பாராட்டி பேசினார்கள். படம் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து பேசும்போது கூட ‘வாழ்’ படத்தில் இருந்து வெளியே வராமல் இருந்தார்கள் என்பது படத்தின் இயக்குநராக நான் திருப்தியடைந்த தருணம் அது. ‘படத்தில் உள்ள கதாப்பாத்திரங்களோடு சேர்ந்து நாங்களும் பயணித்தது புது அனுபவமாக இருந்தது. தற்போதுள்ள இந்த சூழலில் இருந்து விலகி அலுவலகம் முடித்து பயணம் போக மாட்டோமா’ என்று சொன்னார்கள். அதுதான் நானும் எதிர்ப்பார்த்தது.
இதெல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த கதையை எழுதியது. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுகு பிறகு அது கண்முன்னே நடக்கும் போது முழுமையானதாக இருக்கிறது”.
‘வாழ்’ நிறைய புது இடங்களை காட்டியிருக்கிறதே? எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தினீர்கள்?
“படம் அடுத்தடுத்து நிறைய புது இடங்களுக்கு பயணப்படும். அந்த வகையில் தெற்கு ஆசியா, இந்தோனீசியா அதை சுற்றியுள்ள பகுதிகள், அங்குள்ள இரண்டு தீவுகள் என இப்படி பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். சாதாரணமாக நம்மை போன்று இருக்கக்கூடிய ஒரு நபர் இயற்கையோடு பிணைந்து எப்படி தன்னை புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான். அதனால், இயற்கை இந்த படத்தில் மிகப்பெரிய பலமாக இருக்கும்.
ஒவ்வொரு இடத்திற்காக செல்லும் போது அந்த இடம் நமக்கு என்ன அனுபவத்தை கொடுக்கும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. மழை எதிர்ப்பார்த்திருந்தால் வெயில் வரும், வெயில் எதிர்ப்பார்த்திருந்தால் காற்று வானிலையை மாற்றியிருக்கும். இப்படி நிறைய படப்பின்போது நிறைய அனுபவங்கள்”.
நீங்கள் எப்படி? அதிகம் பயணம் செய்யக்கூடிய நபர்தானா?
“ஆமாம். அதுபோன்று நிறைய பயணம் செய்த அனுபவங்கள் இருக்கிறது. பள்ளிக்காலத்தில் இருந்தே வீடு பாதிநாள், காடுநாள் பாதிநாள் என்று இருந்த நபர்தான் நான். காடு, மலை என சுற்றியிருக்கிறேன்”.
‘அருவி’ பட வெற்றி உங்களுக்கு கற்று கொடுத்தது?
“மனிதர்கள் ஒவ்வொருவருடைய தன்மையை, இயற்கையை புரிந்து கொள்ள இந்த படங்கள் உதவியது. ‘அருவி’ படம் செய்வதற்கு முன்னால் சினிமாவில் அது செய்ய வேண்டும் இது செய்ய வேண்டும் என்ற தன்முனைப்பு எனக்கு அதிகம் இருந்தது. அது இல்லாமல், தற்போது என்ன தேவை என்ன செய்ய வேண்டும் என்ற நிதானம் ‘அருவி’ கற்று கொடுத்திருக்கிறது.
‘அருவி’ படம் பார்த்துவிட்டு என்னுடைய அடுத்த படத்தை நிச்சயம் பெரிதாக எதிர்ப்பார்க்கிறோம் என ரசிகர்கள் சொல்லியிருந்தார்கள். மேலும் ‘அருவி’ படம் பார்த்துவிட்டு நிறைய பேர் தங்கள் குழந்தைக்கு அந்த பெயர் வைத்ததாக சொன்னார்கள். இதுபோன்ற நிறைய எமோஷனலான தருணங்களை ‘அருவி’ கொடுத்தது. அதேபோல முதல் கதையாக ‘வாழ்’ எடுக்க நினைத்தபோது நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றுதான் நினைத்தேன். அந்த படம் எடுப்பதற்கான வாய்ப்பு தேடுதான் ‘அருவி’ அந்த சமயத்தில் எடுத்தோம்.
‘வாழ்’ கதை எழுதி பல வருடங்களுக்கு பிறகு படமா வெளிவரவுள்ளது. கதையில் ஏதேனும் மாற்றங்களை செய்திருக்கிறீர்களா?
“‘வாழ்’ படம் எந்த காலத்துக்கும் பொருந்தும். கதை புதியது பழையது என்றெல்லாம் இல்லை. அதனால் பெரிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை”.
தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் உள்ளே வந்தது எப்படி?
“கடந்த 2011ம் வருடமே சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லியிருந்தேன். ‘வாழ்’ படத்தில் நிறைய இடங்கள், இதன் கதை என படத்தை எடுத்து தயாரிக்க தயாரிப்பாளரிடம் நம்பிக்கை வேண்டும். நிறைய புதுமுகங்கள், கதையின் போக்கு என இதில் புதிதாக முயற்சி செய்திருக்கிற விஷயங்கள் அதிகம். சிவகார்த்திகேயன் உள்ளே வந்தபோதே அந்த நம்பிக்கை வந்துவிட்டது. ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை செய்துவிடுங்க. நான் இறுதியில் பார்த்து கொள்கிறேன். நீங்கள் எதுவுமே என்னிடம் சொல்ல வேண்டாம்’ என்றுதான் சொன்னார். புதுமுகங்கள் என்று நான் தயங்கிபோது கூட ‘சூப்பர்’ என சொல்லி உற்சாகம் கொடுத்தார்.
அவர் கொடுத்த உற்சாகம்தான் படத்தை நோக்கி இன்னும் பொறுப்புணர்வோடு எங்களை இயங்க வைத்தது. படம் முடித்ததும் அவரிடம் போட்டு காண்பித்தபோது அவருடைய கருத்தையும் சொன்னார். அதற்கேற்றார்போல சில மாற்றங்களும் செய்திருந்தோம். அதற்கான பாராட்டுகள் முன்னோட்டத்தில் கிடைத்தது. தயாரிப்பாளராக படத்திற்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய பலம்”.
‘வாழ்’ படத்துடைய இசை, ஒளிப்பதிவிற்கு நிறைய பாராட்டுகள் ரசிகர்களிடம் இருந்து பார்க்க முடிந்தது. அது குறித்து சொல்லுங்கள்?
“இந்த படத்திற்காக மட்டுமே உழைத்த நிறைய பேரால்தான் இது சாத்தியப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவாளர் சிபி. அவரும் சரி படத்தில் மற்ற அணியும் சரி இந்த கதையை படமாக்க முழுதாக தங்களை அர்பணித்து செய்தார்கள். இன்று படம் பார்த்துவிட்டு வெளிவந்த அனைவரும் சொல்லக்கூடிய விஷயம் படம் உயிர்ப்பாக இருந்தது என்பதுதான். அதற்கு முழுகாரணமும் அவர்கள்தான்.
இன்னும் பல வருடங்கள் கழித்து பார்க்கும்போதும் படம் இதே உணர்வை உங்களுக்கு தரும். அதேபோல, இசை குறித்தும் சொல்ல வேண்டும். ‘அருவி’ பட வெளியீட்டிற்கு முன்பே நானும் பிரதீப்பும் நல்ல நண்பர்கள். அவர் ஒரு ஊற்று போலதான். இசையை அவரிடம் யாரும் தடுக்க முடியாது. ‘வாழ்’ பொருத்தவரையில் இது ஒரு பயணம் குறித்தான படம் என்பதால் இசை மூலமாக பார்வையாளர்களுக்கு சொல்வதற்கு நிறைய இருந்தது. படத்தோடு நீங்கள் பார்க்கும்போது படமும் இசையும் வேறாக இருக்காது ஒரே புள்ளியில் இருக்கும்”.
படத்தில் எல்லாரும் புதுமுகங்கள் போலயே?
“பிரதீப் மட்டும்தான் ஏற்கனவே ‘அருவி’யில் நடித்திருப்பார். மற்றவர்கள் எல்லாருமே புதுமுகங்கள்தான். கதையில் என்ன இருக்கிறதோ அதுக்கு ஏற்றார்போல எடுத்து செல்ல புதுமுகங்கள்தான் சரியாக இருந்தார்கள்”
அடுத்தடுத்த படங்கள்?
“‘வாழ்’ படத்தில் ஒரு வசனம் வரும், ‘நாளைக்கு நாளைக்கு பார்த்துக்கலாம்’ என அதுதான் படத்தின் கரு. இந்த கேள்விக்கும் என்னுடைய பதில் இதுதான்”.