முழங்கால் காயம் மற்றும் அறுவை சிகிச்சைகள் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் 2021 விம்பிள்டன் இல் விளையாடிய ரோஜர் பெடரர், இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகும் அண்மைய நட்சத்திர ஆவார்.
“நான் சுவிட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு முறையும் எனது தொழில் வாழ்க்கையின் ஒரு மரியாதை மற்றும் சிறப்பம்சமாக இருந்ததால் இந்த முடிவு குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன்.
எனினும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்கும் முழு சுவிஸ் அணிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பெடரர் குறிப்பிட்டுள்ளார்.
ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ், நிக் கிர்கியோஸ் மற்றும் சிமோனா ஹாலெப் ஆகியோருக்குப் பின்னர் 2020 டோக்கியோ விளையாட்டுகளிலிருந்து விலகும் பிரபல்ய வீரர் இவர் ஆவார்.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேவிடம் தோல்வியடைந்ததன் பின்னர் பெடரர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
2008 பீஜிங் போட்டிகளில் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார்.