ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் இது தொடர்பான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பது தொடர்பாக ஆராயும் குழுவின் கலந்துரையாடல் நேற்று(12) நீதி அமைச்சில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டபின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டாார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது ஊடகங்களின் கடமை. அந்தவகையில் நாட்டில் தற்போது மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதில் சில பிரச்சினைகள் அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கும். அதனால் ஊடகங்கள் இந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தும்போது, அதுதொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை.
மாறாக மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் வகையில் அவ்வாறான ஊடகங்களை அடக்குவதற்கு அரசாங்கத்துக்கோ வேறு யாருக்கும் எந்த அதிகாரம் இல்லை.
எனவே நாட்டில் இருக்கும் எந்தவொரு ஊடக நிறுவனத்துக்கும் ஊடகவியலாளருக்கும் அடக்குமுறைகள் ஏற்படுவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் . ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. மாறாக ஊடகங்கள்தான் தங்களுக்கான சுய கட்டுப்பாடுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றவகையில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து செயற்படுவோம் என்றார்.