அங்காடிகள் உள்ளிட்ட பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் சீருடையுடன் பொலிசார் தீவிரமாக கண்காணித்து தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்வார்கள் என பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஒரளவு தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் மேல்மாகாணத்தில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது பலர் முகக்கவசம் அணியாது இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இவ்வாறு முககவசங்களை அணியாதவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கைகள் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே கொவிட் வைரஸ் அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தளர்வுகளின் போது சுகாதார விதிமுறைகளை மீறும் போது தொற்று தீவிரமடையும் ஆபத்துள்ளது. எனவே மக்கள் நாட்டிலுள்ள சுகாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் மேலும் கேட்டுக்கொண்டார்.