கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து அமைந்துள்ளது சுவாமிமலை திருத்தலம். இங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூனஞ்சேரி திருத்தலம். இது மிகவும் சிறப்பு மிக்க சிவாலயத் தலமாகும். திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி மற்றும் ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்களுக்கு இடையே இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.
உடல் ஊனமுற்றவர்கள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அங்க குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. தொடர்ந்து 11 அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் அஷ்டமியன்று, கோவிலில் உள்ள விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 2-வது அஷ்டமி அன்று, கயிலாசநாதரையும், 3-வது அஷ்டமி முதல் தொடர்ந்து எட்டு அஷ்டமிகள் அஷ்ட லிங்கங்களையும், இறுதியாக 11 அஷ்டமி அன்று பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அங்க குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.