குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..
திருமணமான தம்பதிக்கு குறிப்பிட்ட கால அளவை தாண்டியும் குழந்தை பேறு ஏற்படாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அத்தகைய ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு குறைபாடு உள்ள சூழலில் அது பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.
கருவுறாமை என்றால் என்ன?
கருவுறாமை என்றால் பெண்களால் இயற்கையாக கருவுற முடியாததை குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும். இது பொதுவாக 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு கால கட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம். இந்த கருவுறாமை பிரச்சினை ஆண் மற்றும் பெண் என்று இரு பாலருக்கும் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகி்ன்றன.
இந்த கருவுறாமைக்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.
ஏன் ஏற்படுகிறது?
அண்ட விடுப்பின் போது ஏற்படும் சிக்கல். கர்ப்பப்பை குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள், கர்ப்பப்பை வாயில் பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் தொந்தரவும் காரணம் ஆகும். இப்படிப்பட்டவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
அதிக வயதானாலும் பெண்களுக்கு கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப்பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது. ஆகவே குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..
இது தவிர ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சினை ஏற்படுகின்றது. எனவே பெண்கள் பொதுவாக அவர்களின் உடல் எடையை சரியான நிலையில் வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய் தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது. அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சால சிறந்தது. இதையெல்லாம் விட கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்கு தேவையான சுரப்பிகள் ரத்தத்தில் கலந்திருக்காது. அதுவும் கருவுறாமையை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்சினை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் சுதா கூறினார்.