கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட சிலர், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மேல்தாடை பற்களும், மேல் தாடை இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு ‘ஸைக்கோமா இம்ப்ளான்ட்’ என்ற நவீன சத்திரசிகிச்சை மூலம் தீர்வளிக்க முடியும் என பல் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக பல் மருத்துவ நிபுணர் சீனிவாசன் பேசுகையில், ‘ இன்றைய திகதியில் கொரோனா அச்சம் காரணமாக மக்களின் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மக்கள் சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, சத்துள்ள உணவிற்கு போதிய அளவு முக்கியத்துவம் வழங்க தொடங்கியிருக்கிறார்கள். கொரோனாத் தொற்றுக்கு பிறகு சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது.
இதன் காரணமாக மேல் தாடை பற்கள் மற்றும் மேல்தாடை இழப்பும் ஏற்படுகிறது. அதே தருணத்தில் முதுமை, விபத்து, ஈறு நோய்கள், தாடை எலும்பு தேய்மானம், பிறவி குறைபாடு என பல்வேறு காரணங்களால் பலர் தங்களின் பற்களை இழந்திருக்கிறார்கள். இவர்களுக்கு பல் செட் பொருத்திக் கொள்வது அல்லது வேறு ஏதேனும் வகையிலான சிகிச்சைகளை மேற்கொண்டால், அவை நாட்பட்ட அளவில் சவுகரியத்தை வழங்குவதில்லை. பல தருணங்களில் சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவும், இதனை முற்றாக தவிர்க்கும் பொருட்டும் தற்போது ‘ஸைக்கோமா ஆல் ஆன் 4’ என்ற நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.
இத்தகைய சிகிச்சையின்போது நவீன தொழில்நுட்பத்திலான ஓரல் டிஜிட்டல் ஸ்கேன், டெக்ஸ்டாப் பிரிண்ட்டட் ஸ்டென்ட்ஸ், கோன்பீம் சி. டி. ஸ்கேன் துணையுடன் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன் 96 மணி நேரத்தில் நிரந்தரமான செயற்கை பற்களை பொருத்தலாம். இத்தகைய சிகிச்சையின்போது செராமிக் என்ற பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட செயற்கை பற்கள் பயன்படுத்தப்படுவதால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து உழைக்கும்.
இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு உங்களின் முகப்பொலிவு மேம்படுவதுடன், இத்தகைய பற்களால் எத்தகைய சங்கடங்களும் ஏற்படுவதில்லை. உங்களின் புன்னகையும், உணவு உட்கொள்ளும் முறையும் இயல்பானதாக இருக்கும். கூடுதலாக பொருத்தப்பட்ட செயற்கை பற்கள் இயற்கையாக தோற்றமளிப்பதால் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அத்துடன் ஈறு நோய் மற்றும் சர்க்கரையின் அளவும் கட்டுப்படுவதால் இதனை பலரும் வரவேற்கிறார்கள்.
அனுஷா