அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்மந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பிரகார உலா நடைபெற்றது.
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் கோவிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் 5-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
5-ம் தேதி முதல் ராஜகோபுர வாசல் திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சாமி சன்னதியில் தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று அங்கிருந்து கோவில் பின்புற வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (புதன்கிழமை) ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவிலில் உள்ள சம்மந்த விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதனர்.